கீழ்பெண்ணாத்தூரில் கிராம சபை கூட்டம் துணை சபாநாயகர் பங்கேற்பு

கீழ்பெண்ணாத்தூரில் கிராம சபை கூட்டம் துணை சபாநாயகர் பங்கேற்பு
X

கிராம சபை கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர்

துணை சபாநாயகர் தலைமையில் கீழ்பெண்ணாத்தூரில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொலகுணம் ஊராட்சியில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் குப்பு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம், கீழ்பெண்ணாத்தூர் தாசில்தார் சரளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கீழ்பெண்ணாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாச்சலம் அனைவரையும் வரவேற்றார்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட துணை சபாநாயகர் பிச்சாண்டி நல திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகையில், புரட்சிகளை ஏற்படுத்தி துப்பாக்கி முனையில் பல நாடுகளில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது ஆனால் அகிம்சை வழியில் போராடி உலகத்திலேயே சுதந்திரம் கிடைத்த நாடு நமது இந்தியா தான்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று மூன்றாண்டுகளில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். இதன் காரணமாக மத்திய அரசின் திட்டங்களில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்பவர்கள் பெண்கள் தான், அவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கி அங்கீகாரம் அளித்தவர் முதல்வர் ஸ்டாலின் தான். பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி திட்டம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை நமது முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

இந்த ஊராட்சி மக்களின் கோரிக்கையை ஏற்று நகர பேருந்து விடப்பட்டுள்ளது. மேலும் சோமாஸ் பாடி வரை புதிய சாலை அமைக்கும் பணி துவங்க உள்ளது. அதுமட்டுமின்றி கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் ரூபாய் 18 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு அதன் மூலம் இப்பகுதியில் குடிநீர் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது என துணை சபாநாயகர் பேசினார்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா் , வாா்டு உறுப்பினா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், மக்கள் நல பணியாளர்கள், கிராம மக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!