அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்

அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
X

பேருந்தை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்

வேட்டவலம் அருகே பள்ளி நேரத்தில் நிற்காமல் சென்ற அரசு பஸ்சை மாணவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் வேட்டவலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் திருக்கோவிலூர் -வேட்டவலம் வழித்தடத்தில் உள்ள வைப்பூர், தண்டரை, அகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருக்கோவிலூரில் இருந்து வேட்டவலத்திற்கு காலை 9 மணியளவில் வரும் அரசு பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த பஸ் வைப்பூர் கிராமத்திற்கு வரும்போதே பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கடந்த சில நாட்களாக வைப்பூர் கிராமத்தில் பஸ்சை நிறுத்தி மாணவர்களை ஏற்றி செல்வதில்லை. இதற்காக பஸ்சை பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சற்று தள்ளி நிறுத்துகின்றனர். இதனால் மாணவர்கள் ஓடிச்சென்று பஸ்சில் ஏறுகின்றனர். இதனால் சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

இந்த நிலையில் காலை 9 மணி அளவில் அந்த அரசு பஸ் வழக்கம்போல் வைப்பூரில் நிற்காமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் பஸ்சை சிறைபிடித்தனர்.

இது குறித்து தகவலறிந்த வேட்டவலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, தனசேகர், காமராஜ் மற்றும் போக்குவரத்து துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இதே நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாணவர்களின் கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் பல பகுதிகளுக்கு புதிய பேருந்துகள் துவக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் வைப்பூர் கிராமத்திற்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்