கீழ்பெண்ணாத்தூரில் பயனாளிகளுக்கு ரூ.10.14 கோடியில் கடனுதவிகள்
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் நடைபெற்ற விழாவில், 1,503 பேருக்கு ரூ.10.14 கோடியில் பல்வேறு கடனுதவிகளை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் நடைபெற்ற விழாவில், 1,503 பேருக்கு ரூ.10.14 கோடியில் பல்வேறு கடனுதவிகளை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வழங்கினாா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில், புதிய உறுப்பினா்கள் சேர்த்தல் மற்றும் கடன் வழங்கும் மேளா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன் தலைமை வகித்தாா்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம், கீழ்பென்னாத்தூா் ஒன்றியத் தலைவா் அய்யாகண்ணு, அட்மா குழுத் தலைவா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயலாட்சியா் ஜெயம் வரவேற்றாா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய உறுப்பினா்கள் சேர்த்தல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, வாடிக்கையாளா்களுக்கு புதிய சேமிப்புக் கணக்குப் புத்தகங்களை வழங்கினாா். தொடா்ந்து, மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்பட 1,503 பயனாளிகளுக்கு ரூ.10.14 கோடி மதிப்பிலான கடனுதவிகளை அளித்தார்:
அப்போது அவர் பேசுகையில், முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இன்றைக்கு பயனாளிகளுக்கு ரூபாய் 10 கோடியே 14 லட்சம் மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை நல்ல முறையில் பயன்படுத்தி பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயிகளின் பயிர் கடன் ரத்து செய்தது கலைஞர் கருணாநிதி தான், அதன் பிறகு ரூபாய் 7000 கோடி கடன் ரத்து செய்தார். .அதற்காக தான் அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
தற்போது ஸ்டாலின் ஆட்சியில் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்பட பெண்களுக்காகவே இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது . பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000, கல்லூரி பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கியும் சிறப்பான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசினார்.
விழாவில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளா் ஆனந்தி, உதவி பொது மேலாளா்கள், கள மேலாளா்கள், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய உதவியாளா்கள் , தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கச் செயலா்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் சித்ரா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu