உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்த தேர்வு பறக்கும் படையினர்
வேட்டவலம் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்றதாக 2 பேரிடம் ரூ.1.35 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி நிலை கண்காணிப்பு குழுவினர் அதிகாலை வேட்டவலம் அடுத்த வெறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவண்ணாமலை- திருக்கோவிலூர் மெயின் ரோடு வன்னிய நகரம் சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் விழுப்புரம் மாவட்டம், வேங்கூர் அடுத்த நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்த மாடு வியாபாரி அய்யனார் என்பவரிடம் ரூ.80 ஆயிரம் பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதேபோல், வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாடழகனந்தல் நா. கருங்கல்பட்டு அருகே தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், திருவண்ணாமலை மாவட்டம், சு.நல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜ் என்பவரிடம் ரூ.55 ஆயிரத்து 700 ரூபாயை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த 2 நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 700க்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் சரளாவிடம் ஒப்படைத்தனர். பின்னர், அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வந்தவாசி அருகே தெள்ளாா்-தேசூா் சாலை, அகரகொரக்கோட்டை கிராமம் அருகில் பறக்கும் படை அலுவலா் குமரன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், உரிய ஆவணங்களின்றி காரில் ரூ.1.36 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, காரில் வந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை மாதவரம் சாரங்கபாணி நகரைச் சேர்ந்த விஜயா என்பவா் குடும்பத்துடன் சென்னையில் இருந்து தேசூா் செல்வது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.36 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் அந்தப் பணத்தை ஒப்படைத்தனா். பின்னா், பணம் வந்தவாசி துணை கருவூல அலுவலகத்தில் செலுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu