நான்காவது நாளாக தொடரும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
நான்காவது நாளாக தொடரும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.
கீழ்பென்னாத்தூரில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 4-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன்முருகசாமி கலந்து கொண்டு பேசினார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்தபடி 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் கடந்த 5-ந் தேதி முதல் நடந்து வருகிறது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் கீழ்பென்னாத்தூரில் உள்ள மார்க்கெட் கமிட்டி எதிரில் இன்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன்முருகசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதுதான் மிக, மிக முக்கியப் பிரச்னையாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் 10 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து அறவழியில் விவசாயிகளை பெரும் அளவில் திரட்டி விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கு விலை நிர்ணயம், கொள்முதல் இவற்றுக்கான உத்தரவாதம், சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து 30 நாட்கள் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடந்த 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சங்கம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாக உயர்மின் கோபுரங்கள், எண்ணெய் குழாய், எரிவாயு குழாய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு உரிய இழப்பீடாக அரசு திட்ட மதிப்பில் ரூ.1,650 கோடி கூடுதலாக பெற்று வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து மாவட்ட விவசாயிகளையும் ஒன்று திரட்டி சென்னை கோட்டை எதிரே போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ், திருவண்ணாமலை மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் ஏழுமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கோபி என்ற கேசவன், கொள்கை பரப்பு செயலாளர் முனிராஜன், மாவட்ட அமைப்பு செயலாளர் நடராஜன், தன்னார்வலர் பலராமன், இயற்கை விவசாயிகள் கோதண்டராமன், கிருஷ்ணன், முன்னோடி விவசாயிகள் ராமகிருஷ்ணரெட்டியார், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர் போராட்டம் காரணமாக கீழ்பென்னாத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu