உடல் உறுப்பு தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு கலெக்டர் மரியாதை..!
அரசின் சார்பில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய மாவட்ட கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் மாதுளம் பாடி கணேசபுரத்தைச் சேர்ந்த உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் நேரில் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினார்.
உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கும் அரும் பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. மூளைச் சாவு நிலையை அடைந்த துயர சூழ்நிலையிலும் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது.
உடல் உறுப்புகளை தானமாக வழங்கி பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில் அவர்களது உடலுக்கு இறுதி சடங்குகள் அரசு மரியாதைகளுடன் மேற்கொள்ளப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் மாதுளம் பாடி கணேசபுரத்தில் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் ஹரிகரன் என்பவர் கடந்த 31ஆம் தேதி அன்று விபத்துக்குள்ளாகி மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தார் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து அன்னாரது உடல் உறுப்பு தானமாக வழங்கப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசின் சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் அன்னாரது உடலுக்கு மலர் மாலை வைத்து நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். உடன் அரசு அலுவலர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , பொதுமக்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu