மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீர் போராட்டம்

மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திடீர் போராட்டம்

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்

மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளை கண்டித்தும் விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவில் மேல்மா சிப்காட் திட்டத்திற்கு 3வது அலகு நிலம் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மேல்மா, குரும்பூர், வடஆளப்பிறந்தான், அத்தி, இளநீர்குன்றம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அத்தி, இளநீர்குன்றம், வடஆளப்பிறந்தான் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் சிலர் சிப்காட்டிற்கு நிலம் கொடுக்க சம்மதம் தெரிவித்ததாகவும், இதற்காக விலை நிர்ணயம் செய்ய குழு அமைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பொய்யான தகவலை பரப்பி வருவதாக கூறி சிப்காட் எதிர்ப்பு இயக்க விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் காலை ஞானமுருகன்பூண்டி பகுதியில் உள்ள முருகன் கோயில் அருகில் ஒன்று சேர்ந்தனர்.

பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக செய்யாறு ஆற்றுப்பாலம் வழியாக பைபாஸ் சாலையில் உள்ள செய்யாறு மாவட்ட நில எடுப்பு அலுவலகம் வரையில் வந்தனர். தொடர்ந்து, அங்கு வந்த அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், விவசாயிகள் கொளுத்து வெயிலிலும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். மேலும், மாவட்ட சிப்காட் அலுவலர் (நில எடுப்பு) விஜய் பிரபுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாக செய்யாறு சப்- கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் வாயிலில் சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் சப்- கலெக்டர் பல்லவி வர்மாவிடம் கோரிக்கை மனு அளித்தனர் அதில், மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.

காலை 10 மணி முதல் மாலை 1.30 மணி வரையில், மேல்மா சிப்காட் திட்டத்திற்கு தெரிவிக்கும் விவசாயிகளால் செய்யாறு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story