திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம்

கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் ஒன்றியம் கொண்டம் காரியந்தல் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி உரையாற்றினார்.
தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த மாதம் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் கிராமசபை கூட்டங்கள் தண்ணீர் தினம், உள்ளாட்சி தினம் ஆகிய நாட்களிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி தொழிலாளர் தினமான இன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாமண்டூர் கிராமத்தில் இன்று மே தின சிறப்பு கிராம சபை கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு, தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், கூடுதல் ஆட்சியர் பிரதாப் ,செய்யாறு எம்எல்ஏ ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் ஒன்றியக்குழு தலைவர் ராஜி மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சிகளில் 2021-22. ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள் ,பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி திட்டங்கள், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கீழ்பெண்ணாத்தூர்:
கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் காரியந்தல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, தலைமையில் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் ,ஊராட்சி மன்ற தலைவர் மோகன், ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆரணி:
ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் ராஜசேகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கலசப்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வக்கீல் சுப்பிரமணியன் ,ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் அவர்கள் , பங்கேற்று பேசினார்.
செங்கம்:
செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளமஞ்சனூர் ஊராட்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, அவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், தண்டராம்பட்டு வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். செங்கம் அடுத்துள்ள புதுப்பாளையம் ஒன்றியம் கெங்கம் பட்டு ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் உதயசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் சுந்தரபாண்டியன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சசிகலா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu