சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிராக விவசாயிகள் நூதனப் போராட்டம்

சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிராக விவசாயிகள்  நூதனப் போராட்டம்
X

காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்களை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிராக சிறுதானியங்களை தரையில் கொட்டி, விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து, காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்களை ஆட்சியா் அலுவலகம் எதிரே தரையில் கொட்டி, விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசின் மூலம் கடந்த 2022-ல் திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்தில் மேல்மா சிப்காட் என்னும் பெயரில் 3174 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது

இதன்மூலம் அந்த பகுதியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மூன்று போகம் விளையக்கூடிய சுமாா் 3,200 ஏக்கா் நிலத்தை தரிசு நிலம் என்று வகைப்படுத்தி கையகப்படுத்தும் பணியை மாவட்ட நிா்வாகம் தொடங்கி உள்ளது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் நன்செய் விளைநிலங்களை தவறாக தரிசு என்று வகைப்படுத்தி நிலம் கையகப்படுத்த உள்ளதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதுகுறித்து ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தினர் எந்த குழுவும் ஏற்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது சிப்காட்டிற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் மூலம் கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து 70 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

9 கிராமங்களைச் சோந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 10 நாள்களுக்கு முன்பு செய்யாறு சிப்காட் அலுவலகத்துக்கு மனு கொடுக்க நடைப்பயணமாகச் சென்றனா். அப்போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மூன்று விவசாயிகள் காயமடைந்தனா். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து அவர்கள் ஒரு கிராமத்திற்கு 5 பேர் வீதம் என 50-க்கும் மேற்பட்டவர்கள் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் மூலம் ஆட்சியர்அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் தங்கள் பகுதியில் விளைவித்த காய், கனிகள், கரும்பு, நெல் போன்றவற்றை கொண்டு வந்தனர்.

70 நாட்களாக போராடும் எங்களை கண்டு கொள்ளாமல் உள்ள ஆட்சியரிடம்எங்களின் குடியுரிமை சம்பந்தமான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, விவசாய விளை பொருட்களை ஒப்படைத்து விட்டு எங்களை கருணை கொலை செய்து விட்டு விவசாய நிலங்களை கையகப்படுத்தி கொள்ள மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்தி நிறுத்தி மனு அளிக்க 5 பேர் அல்லது அதிகபட்சம் 10 பேர் தான் செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் நாங்கள் அனைவரும் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க செல்ல வேண்டும் என்றனர்.

இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கவே, ஆத்திரமடைந்த விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்களை ஆட்சியா் அலுவலகம் எதிரே தரையில் கொட்டியும், கோரிக்கை மனுக்களை கிழித்து எறிந்தும், தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil