கீழ்ப்புதுப்பாக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம்

கீழ்ப்புதுப்பாக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம்
X

கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் அலுவலர்கள்.

Gram Sabha Meeting- கீழ்ப்புதுப்பாக்கம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாக கூறி கிராமசபை கூட்டத்தை நடத்தவிடாமல் பொதுமக்கள் வாக்குவாதம்.

Gram Sabha Meeting- நாடு முழுவதும் நேற்று 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தன. செய்யாறு ஒன்றியம் கீழ்புதுப்பாக்கம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சுகன்யா பாரி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி பங்கேற்றார்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அங்கு கூடியிருந்த கிராம மக்கள் பலரும், கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் சரியாக வரவில்லை என்றும், தெருவிளக்குகள் சரியாக எரியவில்லை என்றும் கூறியதால் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஊராட்சியின் ஆண்டறிக்கையினை வாசிக்கவிடாமலும், தீர்மானங்களை இயற்றவிடாமலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலை திட்டத்தில் மாதத்தில் ஒரு நாள் மட்டும் தான் வேலை கிடைக்கிறது. சிப்காட்டில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்ததாக கூறி போலி பில் போட்டு பணம் எடுக்கின்றனர் எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், டெண்டரில் குறிப்பிட்ட பணியினை குறிப்பிடப்பட்ட இடத்தில் செய்யாமல் அதற்கு பதிலாக வேறொரு பணி செய்யப்பட்டு அதற்கு பில் வழங்கப்படுகிறது. வேறொரு கிராமத்தில் பணம் கையாடல் செய்த ஊராட்சி செயலாளரை இக்கிராமத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர் என்றும், அந்த ஊராட்சி செயலாளரை உடனடியாக மாற்றிட வேண்டும் என்று சரமாரியாக புகார் கூறி வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை ஜோதி எம்.எல்.ஏ சமாதானப்படுத்தினார். பின்னர் ஒவ்வொருவராக அழைத்து அவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்து அனைவரையும் சமாதனப்படுத்தினார். கிராம மக்கள் தெரிவித்த முக்கிய கோரிக்கையான குடிநீர் பிரச்சனை ஒரு வார காலத்திற்குள் சரி செய்து சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் அமைதி அடைந்தனர்.

இது தொடர்பாக கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர் வார்டு உறுப்பினர் மற்றும் டேங்க் ஆப்ரேட்டர்கள், ஊராட்சி செயலாளர் ஆகியோர் ஊராட்சி பேரேடுகளை எடுத்துக் கொண்டு இன்று காலை செய்யாறு ஒன்றிய அலுவலகத்திற்கு வரவேண்டும் என அவர் கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
how to bring ai in agriculture