சாத்தனூர் அணையில் குவிந்த மக்கள்!
சாத்தனூர் அணையில் குவிந்த பொதுமக்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தின் மிக சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு 119 அடியாகும். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக இந்த அணை தற்போது முழு கொள்ளளவு நிரம்பி காட்சியளிக்கிறது
மிக பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமை மிக்க மலை பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன் விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு, ஆயிரக்கணக்கான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன.
எழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலை பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன. எனவே, விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள், சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.
தீபாவளி பண்டிகையானது நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது
இந்த நாளுக்காக வருடம் முழுவதும் காத்திருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் மகிழ்ச்சியை பட்டாசு மற்றும் இனிப்புகள் மூலம் வெளிப்படுத்தினர்.
மேலும் குடும்பத்துடன் நேரம் செலவிடும் வகையில் பல சுற்றுலா தலங்களுக்கும் மக்கள் படையெடுத்து வந்தனர்.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் குவிந்த பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீச்சல் குளம், படகு சவாரி, ஊஞ்சல், நீர்வீழ்ச்சி, முதலை பண்ணை ஆகியவற்றில் குடும்பத்துடன் மக்கள் விளையாடி மகிழ்ந்தனர்.
சாத்தனூர் அணை பகுதியில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் தலையாகவே காட்சியளித்தது. சிலர் வீடுகளில் இருந்து உணவு கொண்டு வந்து குடும்பத்துடன் சாப்பிட்டு சாப்பிட்டு மகிழ்ந்தனர். சிலர் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர்.
பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். மேலும், சமூக விரோதிகள் குடித்து விட்டு சுற்றுலா பயணிகளிடம் தகராறு செய்வதை தடுக்கும் வகையில் சாத்தனூர் அணைக்கு மதுபாட்டில்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. சந்தேகத்துக்குரிய நபர்களை சோதனை செய்த பின்பே அணைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை அணை திறந்து இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலை பகுதியில் உள்ள பீமன் அருவி, படகுக்குழாம், பூங்கா, கோவிலூர் சிவன் கோயில், அமிர்தி வனவிலங்கு சரணாலயம் ஆகிய முக்கிய சுற்றுலா பகுதிகளிலும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று மகிழ்ந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu