திருவண்ணாமலை:10-க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின
சாத்தனூர் அணை
சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக கடந்த மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் உள்ள 40 ஏரிகளுக்கு இடதுபுற கால்வாய் வழியாக சென்றது. குறிப்பாக கால்வாய்கள் தூர்ந்து போனதால் தண்ணீர் ஏரிகளுக்கு விரைவாக செல்ல முடியாத சூழல் நிலவி வந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் வந்ததன் காரணமாக தற்போது 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான மழுவம்பட்டு, அகரம்பள்ளிபட்டு, சதாகுப்பம், தச்சம்பட்டு, நரியாபட்டு, அல்லிகொண்டபட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் தற்போது தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு ஒரு மாதமான நிலையில் தற்போது தான் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.ஆனால் ஏரி தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியேறவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு மட்டும் பயனுள்ளதாக உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் ஏரியில் உள்ள தண்ணீர் விரைவாக வடிந்து விடும் சூழல் நிலவி உள்ளது.
எனவே சில ஏரிகளுக்கு தண்ணீர் முழுமையாக செல்லாததினால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் முழுமையாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu