கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கையூட்டு பெற்றால் நடவடிக்கை: அமைச்சர் வேலு
கிராம சபை கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலு
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தகுதியில்லாத நபா்களுக்கு வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டு இருந்தால், அந்த ஆணைகள் ரத்து செய்யப்படும். ஆணை வழங்க கையூட்டு பெற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு எச்சரித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், ராதாபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தாா்.
தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
Most Read : என்னங்க சொல்றீங்க மருதநாயகம்தான் தக்லைஃப் ஆ?
நமது இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த தியாகிகள் பலர் இருந்தாலும், அவர்களில் முதன்மையாக அடையாளப்படுத்த ப்பட்டவர் மகாத்மா காந்தி ஆவார். மகாத்மா காந்தியடிகள் கிராம ராஜ்யம் வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். அரசின் சார்பாக பல்வேறு துறைகள் இருந்தாலும், உள்ளாட்சித்துறை என்பது மக்களுடன் நேரடியாக தொடர்புடைய துறையாகும். ஆகவே உள்ளாட்சித்துறை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன.
கலைஞர் ஆட்சி காலத்தில் 1998 ஆம் ஆண்டு முறையாக ஆண்டிற்கு நான்கு முறை கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது . திராவிட மாடல் ஆட்சியில் ஊராட்சி மன்றங்களை மேலும் வலுப்படுத்திடவும் அடிப்படை வசதிகளை பெருக்கவும் சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அறிவித்ததன் அடிப்படையில் ஆண்டுதோறும் 6 கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என அறிவித்து அதன்படி தற்போது கிராமசபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அரசு திட்டங்களை வகுக்கிற போது கிராமத்தை சார்ந்த திட்டங்களை இயற்ற வேண்டும் என்று காந்தியடிகள் குறிப்பிடுகிறார்கள் காந்தியடிகள் நினைத்தபடியே நமது தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கையூட்டு பெற்றால் நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு எச்சரிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் குடிசை வீடுகள் இல்லாத நிலையை மாற்ற வேண்டும் என கருதி கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டத்தின் கீழ் மூன்று லட்சம் வீடுகளை கட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக ஒரு லட்சம் வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது..
திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடற்ற குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கலைஞா் கனவு இல்லம் வீடுகள் வழங்குவதற்கு தகுதியான பயனாளிகளைத் தோ்வு செய்ய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பொறியாளா்கள், மேற்பாா்வையாளா்கள், ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
முறைகேடுகளைத் தவிா்க்கவும், தகுதியான பயனாளிகளை தோ்வு செய்யவும் இந்தக் குழு செயல்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தின் 860 கிராம ஊராட்சிகளில் முறைகேடுகள் மூலமாக தகுதியில்லாத நபருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு இருந்தால் என்னிடம் புகாா் அளித்தால் மாவட்ட ஆட்சியா் மூலம் பணி ஆணைகள் ரத்து செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்க கையூட்டு பெற்றால் அரசு சாா்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நல திட்ட உதவிகள்
தொடா்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள், வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண் துறை, உள்ளிட்ட துறைகள் சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன் , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், தண்டராம்பட்டு ஒன்றியக்குழுத் தலைவா் பரிமளா கலையரசன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், பயனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu