திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிப்பூர திருவிழா கோலாகலம்..!
திருத்தணி கோயிலில் ஆடிப்பூர விழாவில் காவடி எடுத்துவந்த பக்தர்கள்.
ஆடிப்பூர விழாவை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம் படை என போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஆடிப்பூரம் விழாவை கோலாகலமாக பக்தர்கள் கொண்டாடினர். ஆடி மாதம் என்று சொன்னால் தேடிவரும் செல்வம்.ஆடி மாதத்தில் பக்தி சன்மார்க்கங்கள் வழிபாட்டு முறைகள் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் அதிக பக்தியோடு வழிபடுவது வழக்கம்.
இந்த நிலையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தில் பல்வேறு விழாக்கள் நடந்தாலும் ஆடி கிருத்திகை அடுத்து இந்த ஆடி மாதத்தில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆடிப்பூரம் என்பது ஒரு நட்சத்திரத்தை குறிப்பதாகும்.
இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து அஷ்ட ஐஸ்வர்யங்களும், நிறைவேறாத வேண்டுதல்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திருத்தணியில் குவிந்தனர்.
அதிகாலையில் பக்தர்கள் மொட்டை அடித்து சரவணப் பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி உடலில் அலகு குத்தியும் மயில் காவடி, புஷ்பக் காவடி, பன்னீர் காவடி என பல்வேறு காவடிகளை சுமந்து வந்தும் படிக்கட்டின் வழியாக பம்பை உடுக்கை முழங்க கிராமியக் கலையோடு நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தி முருகப்பெருமானை வழிபட்டனர்.
இந்த ஆடிப்பூர விழாவில் முக்கியமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆண்டுதோறும் பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிந்து கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர். சென்னையில் இருந்து திருத்தணி வரைக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முதல் இரவு பகல் என பாராமல் நடைபயணமாக வந்தும் முருகனை தரிசித்தனர்.
ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அதிகாலையில் மூலவர் கடவுளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம். பச்சைக்கல்மரகத மாலை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பல மணி நேரம் நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கோயில் இணைஆணையர் க. ரமணி, அறங்காவல் குழு தலைவர் சு.ஸ்ரீதரன், அறங்காவலர்கள் ஜி.உஷாரவி, கோ.மோகனன், வி.சுரேஷ் பாபு, மு.நாகன் மற்றும் அதிகாரிகள் விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu