அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரிக்கை
மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த சட்டமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்படும் திருத்தணி அரசு மருத்துவமனை
திருவள்ளூர் மாவட்டம் , திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், தமிழத சுகாதாரத்துறை மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் மனு அளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் அளித்த கோரிக்கைமனு விவரம்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை இந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள் மருத்துவசிகிச்சை பெறும் முக்கியமான மருத்துவமனையாகத் திகழ்கிறது.திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திருத்தணி அரசு மருத்துவமனையையே சார்ந்திருக்கின்றனர். அறுபடை வீடுகளில் ஒன்றாகத்திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். எதிர்பாராத விதமாக உடல்நலம் பாதிக்கப்படும் பக்தர்களும் அவசர சிகிச்சைக்காக அரசு இந்த மருத்துவமனையை நாடுகின்றனர்.
எனவே, அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளும் தொகுதி மக்களுக்கு கிடைப்பதற்கு திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். அப்போதுதான் இப்பகுதி மக்கள் மேல் சிகிச்சைக்காக வெளியூர்களுக்குச் செல்லும் நிலை தவிர்க்கப்படும்.
இம்மருத்துமனையில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு தேவைப்படும் இடவசதியும் அடிப்படை கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. எனவே , பொது நலன் கருதி திருத்தணி அரசு மருத்துமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu