ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
X
திருத்தணி அருகே மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை மூச்சியில் ஈடுபட்ட போது அலாரம் அடித்ததால் ஓட்டம்.

திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகையில் 2வது முறையாக ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. சிசிடிவியில் பதிவாகாமல் இருக்க நூதன முறையில் டார்ச் அடித்தும், கேமராவை திருப்பியும் வைத்து முயற்சி. அலாரம் அடித்ததால் மர்ம நபர் ஓட்டம். திருத்தணி போலீசார் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை கிராமத்தில் நொச்சிலி செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியும் அதன் முன்பு ஏ.டி.எம்., மையமும் இயங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒருவர் பணம் எடுப்பதற்காக சென்று பார்த்த போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார், அந்த நபர், இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் திருத்தணி பொறுப்பு காவல் ஆய்வாளர் மலர், எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.


மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை மர்ம நபரின் அடையாளம் சிசிடிவியில் பதிவாகாமல் இருப்பதற்காக நள்ளிரவு 1:20 மணியளவில் வங்கியை ஒட்டியுள்ள கடைகளின் சுற்றுச்சுவர் மீது ஏறி ஹெல்மெட் அணிந்து வந்த நபர் உள்ளே செல்வதும், பின் சிசிடிவியில் காட்சிகள் பதிவாகாமல் இருக்க நூதன முறையில் ஏ.டி.எம்., மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராவை நோக்கி டார்ச் லைட் அடித்தபடி, அதை திருப்பி வைத்துவிட்டு, ஏ.டி.எம்., இயந்திரத்தின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

பின்னர் பணம் வைக்கும் இயந்திரத்தை சுத்தி மற்றும் உளியால் அடித்து உடைக்க முயற்சித்துள்ளது தெரியவந்தது. அப்போது அலாரம் அடித்ததாலும் மர்ம நபரால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததாலும் ஏமாற்றுத்துடன் அங்கிருந்து தப்பியோடியதும் தெரியவந்தது.


இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் நிக்கி ஏடிஎம் மையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி நின்றது. இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது நேற்று மாலை ரூ. 20 லட்சம் ஏடிஎம் இயந்திரத்தில் வைத்ததாகவும், குறைந்தது 3 முதல் 4 லட்சம் வரை வாடிக்கையாளர்கள் எடுத்து இருக்கலாம் என்றும் மீதமுள்ள ரூ 16 லட்சம் ரூபாய் தப்பியது என்றும் வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தால் கே.ஜி.கண்டிகையில் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த கொள்ளை முயற்சி 2-வது முறையாக நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே காவலாளி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருத்தணி_சோளிங்கர் சாலையில் உள்ள சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!