அம்மன் கழுத்து தங்க தாலி திருட்டு : 24 மணி நேரத்தில் திருடன் கைது..!
கோப்பு படம்
திருத்தணியில் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கழுத்தில் இருந்த 3- சவரன் தங்கத் தாலியை திருடி சென்ற திருடனை சி.சி.டி.வி கேமரா உதவியுடன் 24 மணி நேரத்தில் காவல்துறையினர் பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி பெரியார் நகர் பகுதியில் மகிஷாசுராமர்த்தினி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை யசோதா (வயது80) என்பவர் நிர்வாகம் செய்து வருகிறார். இவரது கணவர் லட்சுமணன் முன்னாள் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. அவர் உயிரிழந்த நிலையில் இந்த கோயிலில் பூஜை செய்ய ஒருவர் வந்துள்ளார். உள்ளே வந்த அந்த நபர் யசோதாவிடம் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை அம்மன் மடியில் வைத்து பூஜை செய்த எலுமிச்சம் பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
கோயிலில் இருந்த யசோதா அம்மனுக்கு பூஜை செய்து தருகிறேன். ஆனால் எலுமிச்சம்பழம் இல்லையென்று கூறியுள்ளார். நான் வாங்கி வருகிறேன். பூஜை செய்து கொடுங்கள் என்று எலுமிச்சம்பழம்,தேங்காய் ஆகியவற்றை அந்த மர்ம நபர் வாங்கி வந்து கொடுத்துள்ளார். இதனை வாங்கி வந்த எலுமிச்சம் பழத்தை அம்மன் மடியில் வைத்து பூஜை செய்து தாருங்கள் என்று கூறிய மர்ம நபர் கோவிலுக்கு முன்பு அமர்ந்துள்ளார்.
அதற்குள் கோயிலை நிர்வாகிக்கும் யசோதா குடிதண்ணீர் குடித்து வருவதற்காக அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். கோயிலுக்கு முன்பு அமர்ந்திருந்த அந்த மர்ம நபர் அம்மன் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க தாலியை கொள்ளையடித்துக் கொண்டு வேப்பிலை எடுத்து வருவதாக கூறிவிட்டு மின்னல் வேகத்தில் அந்த பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
திருக்கோவிலுக்கு உள்ளே அம்மன் கழுத்தில் இருந்த தாலியும் சில பாகங்கள் கீழே இருப்பதை பார்த்தவுடன் யசோதா அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்த பொதுமக்களை அழைத்து திருடன் அம்மன் கழுத்தில் உள்ள தாலியை திருடிச் சென்றுவிட்டான் என்று கூச்சலிட்டுள்ளார். உடனடியாக இதுகுறித்து திருத்தணி காவல் நிலையத்தில் யசோதா புகார் அளித்துள்ளார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு மர்ம நபரை தேடி வந்தனர். இதில் அதில் பதிவாகிய நபர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சார்ந்த சதீஷ் (வயது 27). என்பதை போலீசார் உறுதி செய்து, அவனை கைது செய்து அவனிடமிருந்து அம்மனின் மூன்று சவரன் தங்கத் தாலியை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu