காதல் தகராறில் பெண்ணின் தாயை கத்தியால் குத்திய இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட இளைஞர்.
பெரியபாளையம் அருகே காதலியின் தாயை கத்தியால் சரமாரியாக குத்தினார் இளைஞர். ஆபத்தான நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கொசவன்பேட்டை காமாட்சி நகரை சேர்ந்தவர் சிவபாலசாமி. நெசவு தொழிலாளியான இவரது மனைவி சந்திரகுமாரி (வயது38). இவர்களது 19 வயது மகள் சென்னை தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு இளங்கலை வேதியியல் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். சிவபாலசாமி, சந்திரகுமாரி தமது குடும்பத்துடன் இன்று காலை அருகில் உள்ள சிறுவாபுரி கோவிலுக்கு சென்ற போது இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்து அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது சிவபால்சாமியின் மகளான கல்லூரி மாணவியும் தானும் கல்லூரியில் ஒன்றாக படித்த காலத்தில் இருந்தே காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை பிறகு வந்து பேசிக் கொள்ளுமாறு அங்கிருந்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் கோவிலில் இருந்து குடும்பத்துடன் வீடு திரும்பிய போது இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்து மகளை காதலிப்பதாக கூறியது குறித்து அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதனையடுத்து சிவபாலசாமி தமது மகளை அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். சந்திரகுமாரி வீட்டில் தனியாக இருந்த போது அந்த இளைஞர் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து சந்திரகுமாரியின் வீட்டில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்றபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்ட நிலையில் ஜன்னல் வழியே எட்டி பார்த்த போது சந்திரகுமாரி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
அப்போது அந்த இளைஞரும் வீட்டிற்குள் இருந்துள்ளார். தொடர்ந்து பொதுமக்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இளைஞரை பிடித்து மற்றொரு அறையில் வைத்து பூட்டினர். தொடர்ந்து பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சந்திரகுமாரியை மீட்டு 108அம்புலன்ஸ் மூலம் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இளைஞரை பிடித்து நடத்திய விசாரணையில் அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த பரத் என்பதும் சந்திரகுமாரியின் மகள் படித்த கல்லூரியில் படித்தது தெரிய வந்துள்ளது. மாணவி முதலாம் ஆண்டு படித்த போது 3ஆம் ஆண்டு படித்த பரத் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக தெரிவித்துள்ளார். பரத் நடவடிக்கைகள் பிடிக்காமல் போகவே நாளடைவில் மாணவி பரத்திடம் இருந்து விலகி சென்றுள்ளார். இது தொடர்பாக பரத் பலமுறை காதலியின் தாயிடம் முறையிட்டு பெண் கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை மீண்டும் காதலியின் வீட்டிற்கு வந்த போது யாரும் இல்லாததால் அவரை சிலர் பேருந்தில் அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து சென்றவர் காதலியின் தாயை ஏதேனும் செய்ய வேண்டும் என திட்டமிட்டு கடைவீதிக்கு சென்று கத்தி ஒன்றை வாங்கி கொண்டு மீண்டும் காதலியின் வீட்டிற்கு திரும்பி வந்து தாயிடம் பெண் கேட்டுள்ளார்.
அதற்கு சந்திரகுமாரி மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் பரத்தை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த பரத் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்திரகுமாரியை சரமாரியாக குத்தியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த இளைஞர் பரத்தை பெரியபாளையம் காவல் நிலையம் கொண்டு சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை ஏற்க மறுத்ததால் காதலியின் தாய் சரமாரியாக குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu