திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்

திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
X
திருவள்ளூர் அருகே மருதவல்லிபுரம் கிராமத்தில் 8.மாத காலமாக சாலையை சீரமைத்து தராததை கண்டித்து கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்டது மருதவல்லிபுரம் கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திலிருந்து திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு பள்ளி மற்றும் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் மணவூர் அண்ணாநகர் முதல் மருதவல்லிபுரம் வரை செல்லும் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் இந்த சாலை சேதமடைந்திருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து எடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 8 மாதத்திற்கு முன்பு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. 2.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட சாலை அமைக்கும் பணி ஜல்லி கற்கள் கொட்டிய தோடு அதற்கு அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ளாமல் உள்ளது.

மேலும் அந்த சாலையில் உள்ள குட்டைக்கு தடுப்பு சுவர் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அந்த தடுப்பு சுவரும் கட்டப்படாமல் பள்ளமாகவே உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சைக்கிளில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து ஒன்றிய நிர்வாகத்திடம் கேட்டதற்கு முறையான பதில் இல்லை என தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் இந்த சாலையில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதே நேரத்தில் மருதவல்லிபுரம் கிராமத்திற்கு ஆட்டோ போன்ற வாகனம் வர மறுப்பதாகவும், ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு300 ரூபாய் கொடுத்தால் தான் வரக்கூடிய சூழ்நிலை இருப்பதால் மிகுந்த சிரமமாக இருப்பதால் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா