திருவள்ளூர் அருகே கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டு சாலை மறியல்

திருவள்ளூர் அருகே கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டு சாலை மறியல்
X

குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கிராம மக்கள்.

திருவள்ளூர் அருகே கிராம மக்கள் விதிகள் மீறிய குவாரியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

திருவள்ளூர் அருகே வெள்ளியூர் ஏரியில் அரசு விதிகளை மீறி மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் 1 மணி நேரத்துக்கு மேலாகவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் கிராமத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கிராமத்திற்கு சொந்தமான சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் சவுடு மண் எடுக்க தனி நபருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியின் பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் குவாரி இயங்கி வருகிறது.இங்கு அனுமதி அளித்துள்ள இடம் மட்டுமல்லாமல் அனுமதி வழங்காத இடத்திலும் ஐந்துக்கும் மேற்பட்ட ஹிட்டாச்சி இயந்திரங்களை வைத்து அரசு விதிகளை மீரி சுமார் 10.அடிக்கு மேலாகவே பள்ளம் தோண்டி நாள் ஒன்றுக்கு 1000 லாரி லோடு எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் இந்த ஏரியின் நீரை நம்பி சுமார் 2000ஏக்கர் விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர், காய்கனிகள் உள்ளிட்ட பருவத்திற்கு பயிர்களை பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் இந்த ஏரி அருகே அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஏரியில் அதிக அளவில் பள்ளம் எடுப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் போது மாணவர்கள் விளையாட சென்றால் அதில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் மட்டுமல்லாமல் ஆடு, மாடு மேச்சலுக்கு செல்லும்போது பள்ளத்தில் சிக்கி பலியாகும் அபாயம் உள்ளது என கிராம மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்து நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்று கூடி குவாரியில் மண் எடுக்க வந்த ஹிட்டாச்சி இயந்திரங்களை சிறைபிடித்து முற்றுகையிட்டு தாமரைப்பாக்கம்- திருவள்ளூர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கல் காவல்துறையினர், மற்றும் திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் தினேஷ்குமார், கிராம நிர்வாக அதிகாரி ஜீனத் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் தெரிவிக்கையில் தங்கள் பகுதியில் சவுடுமண் குவாரி இயங்குவதாகவும் இங்கு அரசு விதிகளை மீறி அதிக அளவில் மண் எடுப்பதால் அங்கு பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் மழைக்காலத்தில் இது ஆபத்தாக மாறிவிடும் எனவும், அதிக பள்ளம் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயமும் இதனை நம்பி சுமார் 2000 ஏக்கர் விலை நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், எனவே உடனடியாக குவாரியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததின் பெயரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
ai healthcare products