சுரங்கப்பாதை அமைத்து தர கிராம மக்கள் சாலை மறியல்
வெங்கல் அருகே எண்ணூர்-மாமல்லபுரம் 200 அடி சாலையில் மூலக்கரை அருகே சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்ப்பதற்காக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சந்திப்பு வரை 133 கிமீ நீளத்திற்கு 200 அடி அகலம் கொண்ட சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின்படி எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவள்ளூர்,ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள் கோயில் வழியாக மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 200 அடி அகலம் கொண்ட சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அடுத்த மூலக்கரை என்ற பகுதியில் உள்ள சாலையை 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால்,சாலை பணி நிறைவு பெற்றால் இந்த சாலையை கடந்து சென்று வர முடியாது. மேலும், பல கிலோமீட்டர் தூரம் கிராம மக்கள் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படும்.
எனவே எறையூர், சித்தம்பாக்கம், மேலானுர், மொண்ணவேடு, ராஜபாளையம், மெய்யூர், விளாப்பாக்கம், அரும்பாக்கம், மாளந்தூர், தேவேந்தவாக்கம் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூலக்கரை பகுதியில் ஒரு சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டுமென சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சுரங்கப்பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.200 அடி அகலம் கொண்ட சாலை அமைக்கும் பணி சுமார் 70 சதவீதம் முடிவடைந்து விட்டது.
இந்நிலையில் நேற்று மேற்கண்ட 15 கிராமத்தைச் சேர்ந்த100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் வெங்கல்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மூலக்கரை பகுதியில் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில் இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வெங்கல் காவல் நிலைய போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வந்தனர். பின்னர், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சங்கர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
இதில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்பதாகவும், சுரங்கப்பாதை அமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி கூறியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu