அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்
அத்தங்கிகாவனூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண் அள்ளுவதாக கூறி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் இருந்து தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு சவுடு மண் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஏரியில் ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள பகுதியில் சவுடு மண் எடுக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும்,கனிமவளத்துறை அதிகாரிகளும் அனுமதி அளித்தனர். ஆனால்,சவுடு மண் அள்ளும் தனி நபர்கள் குறிப்பிட்ட இடத்தை தவிர்த்து வேறு பகுதியில் மண் அள்ளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும்,இரவு நேரங்களில் இந்த ஏரியில் உள்ள ஒரு பகுதியில் மணல் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக வெங்கல் குப்பம் கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், நான்கு ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் மண் எடுக்க வேண்டிய குறிப்பிட்ட இடத்தை விட்டுவிட்டு வேறு இடத்தில் சவுடு மண் அள்ளியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்,அளவுக்கு அதிகமான ஆழத்தில் சவுடு மண் அள்ளுவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் சவுடு மண் எடுத்த தனி நபர்கள் ஹிட்டாச்சி இயந்திரங்களை ஏரியின் ஒரு பகுதியில் ஓரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். மேலும்,குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சவுடு மண் அள்ளுவோம் என கிராம மக்களிடம் கூறினர். இப் பிரச்சினையால் சம்பவத்தன்று தற்காலிகமாக குவாரியை மூடினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் அத்தங்கி காவனூர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் சுமார் 20 அடி ஆழத்திற்கு மேலாகவே சவுடு மண் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், இதனை நம்பி ஏரியை சுற்றி சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருவதாகவும், கடந்த மிகஜாம் புயல் அன்று ஏரி கொள்ளளவு நிரம்பியும் அதற்கு முன்பு மண் எடுத்ததற்கு காரணத்தினால் தோசைக்கல் மீது தண்ணீர் செலுத்த மாதிரி ஆவி ஆகிவிட்டது இதற்கு காரணம் அதிக மண் எடுப்பது காரணம்.
மேலும் ஒரு முறை தாங்கள் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்ததின் காரணத்தினால் தங்குவதற்கு இடமில்லாமல் வெங்கல் பகுதியில் உள்ள பள்ளியில் அப்பகுதி மக்கள் தஞ்சம் புகுந்ததாகவும், தற்போது கோடை காலம் வந்துவிட்ட நிலையில் அதிக அளவில் மண் எடுப்பதால் நிலத்தடி நீர் குறையும் அபாயத்தினால் குடிதண்ணீருக்கும் பிரச்சனை ஏற்படும் எனவும்,
இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே மாவட்ட ஆட்சியர் கனிமவளத்துறை அதிகாரிகள் இந்த சவுடு மண் குவாரி நடைபெற்ற இடத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பிரச்சினையால் சுமார் ஒரு மணி நேரம் இப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu