திருவள்ளூர் அருகே பேருந்து வசதி செய்து தர கோரி கிராமத்தினர் உண்ணாவிரதம்
திருவள்ளூர் அருகே பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்டலம் ஊராட்சியில் சுமார் 2500க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் கடந்த 77 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை பேருந்து வசதி இல்லாமல் மிகவும் தவித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கடம்புத்தூர் செல்வதற்கு கூவம் ஆற்றை கடந்து மழைக்காலங்கள் ஆபத்தான நிலையில் சென்று வருவதும். மழைக்காலங்களில் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் சென்றால் 7 கிலோ மீட்டர் சுற்றி சென்று கடம்பத்தூர் செல்லும் நிலை இருந்து வருவதும், மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் சென்றால் முதியவர்கள், நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட வழியில்லாமல் பரிதவித்து வருவதாகவும், கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் நிறைய பேர் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு நிகழ்வு தொடர்ந்து நடந்தேறி வருவதாகவும்,
மேலும் இப்பகுதியைச் சேர்ந்த பள்ளி கல்லூரி பயின்று வரும் மாணவர்கள் மழைக் காலங்களில் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுவதும், பேருந்து வசதி இல்லாததால் பள்ளி செல்லாமல் விடுமுறை எடுக்கும் காரணத்தினால் தேர்வு காலங்களில் தங்களால் சரியான முறையில் தேர்வுகளை எழுத முடியாமல் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்து வருவதாகவும் புகார் கூறப்பட்டு வருகிறது.
பேருந்து வசதி வேண்டி ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பலமுறை போராட்டம் மேற்கொண்டும் அரசு செவி சாய்க்கவில்லை எனக் கூறி ஆத்திரமடைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராம மையப்பகுதியில் அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
போராட்டம் மேற்கொண்டு வரும் பொது மக்களிடம் திருவள்ளூர் துணை தாசில்தார் லில்லி ஒயிட் பேச்சு வார்த்தை நடத்தியும் மக்கள் உடன்படாததால் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் எனக் கூறி மக்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu