புழல் சிறை கைதிகளுக்கு போதை மாத்திரைகளை கொடுக்க முயன்ற இருவர் கைது

புழல் சிறை கைதிகளுக்கு போதை மாத்திரைகளை கொடுக்க முயன்ற இருவர் கைது
X
புழல் சிறை கைதிகளுக்கு போதை மாத்திரைகளை கொடுக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

புழல் சிறைக்குள் உள்ள கைதிக்கு கஞ்சா, போதை மாத்திரைகளை கொடுக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். குளியல் சோப்பிற்குள் மறைத்து கடத்த முயன்ற கஞ்சா, போதை மாத்திரைகள் சோதனையில் சிக்கின.

சென்னை புழல் மத்திய சிறையில், தண்டனை, விசாரணை, மகளிர் என 3பிரிவுகள் அமைந்துள்ளன. இதில் விசாரணை சிறையில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை ஓட்டேரியை சேர்ந்த முகேஷ்குமார் என்பவர் வழிப்பறி, திருட்டு வழக்கில் சென்னை செக்ரட்ரியேட் காலனி காவல் நிலைய வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 12ஆம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரை பார்ப்பதற்காக இவரது நண்பர்களான ஓட்டேரியை சேர்ந்த சுதாகர் (26), பெரும்பாக்கத்தை சேர்ந்த 17வயது சிறுவன் இருவரும் புழல் சிறைக்கு சென்றுள்ளனர். அப்போது கைதிக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற பொருட்கள் அடங்கிய பையை சிறை காவலர்கள் சோதனை செய்ய முயன்றனர். அப்போது சிறை காவலர்கள் சோதனை செய்ய இருவரும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். விடாமல் தொடர்ந்து சிறை காவலர்கள் பொருட்களை தீவிர சோதனை நடத்தினர்.

இதில் குளியல் சோப்பிற்குள் மறைத்து வைத்திருந்த கஞ்சா, போதை மாத்திரைகள் சிக்கின. இதனையடுத்து கைதிக்கு கஞ்சா, போதை மாத்திரைகளை கொடுக்க முயன்ற இருவரையும் புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்து இது தொடர்பாக சிறை அதிகாரிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் மிரட்டியது, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட 5பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருவரையும் புழல் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business