மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது !

மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது !
X
ஆரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய வழக்கில் 2 பேர் கைது. 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த புதுப்பாளையம் அருகே ஆரணி ஆற்றில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருப்பதைக் கவனித்தனர்.

இந்த கடத்தல் குறித்து தெரிய வந்ததையடுத்து, போலீசார் அவர்களை பாய்ந்து பிடிக்கச் சென்றனர். போலீஸைப் பார்த்ததும் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றார். போலீசார் துரத்தி சென்று இருவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ஆரணி அருகே மங்களம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர்(30), மற்றும் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன்(22) என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர் பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி இருவரையும் பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.

ஆரணி ஆற்றில் தொடர் மணல் கொள்ளை நடைபெறுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றசாட்டுகின்றனர். மேலும் இதுபோன்று சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!