திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

தீக்குளிக்க முயன்றவர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரில் வந்த ஆட்சியரின் வாகனத்தை மறித்து உடலில் பெட்ரோல் ஊற்றி கொண்டு இருளர் மக்கள் நல சங்க மாவட்ட தலைவர் பிரபு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த, இருளஞ்சேரி பகுதியில். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் இருளர் இன மக்களுக்காக அரசு 41 வீடுகள் கட்டுவதற்கு அரசு ஆணை வழங்கியும் இதுவரை அப்பகுதி மக்களுக்கு அந்தப் பணிகளை துவக்காமல் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அலைகழிப்பதாகவும் இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் முடிந்து மதிய உணவிற்கு ஆட்சியர் அவரது இல்லத்திற்கு காரில் சென்ற போது இருளர் மக்கள் நல சங்க மாவட்ட தலைவர் பிரபு ஆட்சியரின் காரை மறித்து கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதனை பார்த்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரது தலையில் தண்ணீரை ஊற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு நின்றவரை கண்டவுடன் ஆட்சியரின் ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கி சென்று விட்டார். ஆட்சியரின் கார் அருகே உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu