குமாரச்சேரியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை; 8 பேர் கைது!
கொலை செய்யப்பட்ட வாலிபர்
திருவள்ளூர் அடுத்த குமாரச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் காமேஷ். தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 1 வருடமாக பணியில் இல்லாமல் இருந்து வந்தார். தற்போது விவசாயம் செய்துவந்தார். இந்தநிலையில் புதிய இருளஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதாக கஞ்சா வியாபாரி கமலக்கண்ணன் குறித்து மப்பேடு போலீசில் தகவல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கமலக் கண்ணனை தேடி வந்தனர். இதனால் கஞ்சா வழக்கில் கமலக்கண்ணன் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் கமலக்கண்ணன் கடந்த வாரம் ஊருக்கு வந்துள்ளார்.
இதுகுறித்து மப்பேடு போலீசாருக்கு தெரிய வரவே, மப்பேடு போலீசார் இளஞ்சேரி கிராமத்திற்கு சென்று கமலக் கண்ணனை தேடி சென்றுள்ளனர். இந்நிலையில் தான் வந்ததை காமேஷ் தான் 'போலீசாருக்கு தகவல் தெரிவித்திருப்பார் என்று நினைத்து காமேசை வழி மறித்து கமலக்கண்ணன் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 8 பேரையும் பிடிக்க திருவள்ளூர் டி.எஸ்.பி அசோகன் தலைமையில், மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையா, சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருவள்ளூர் டோல்கேட் அருகே இருசக்கர வாகனங்களுடன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் விரைந்து சென்ற தனிப்படை போலீசார் புதிய இருளஞ்சேரியை சேர்ந்த கமலக்கண்ணன் (30), நாகராஜ் (29), குமரியை சேர்ந்த வசந்தகுமார் (21), சசிகுமார் (21), கோபாலகிருஷ்ணன் (24), சூர்யா (23), ராஜேஷ் (20), சேதுபதி (24) ஆகிய 8 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். திருவள்ளுவர் நடுவர் நீதிமன்ற குற்றவியல் நீதிபதி முன் ஆஜர் படுத்தி 8 பேரையும் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu