திருவள்ளூர் தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம்
திருவள்ளூரில் நடைபெற்ற தேமுதிக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் நடைபெற்றது. அறிமுக கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் மற்றும் தேமுதி மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, எம்ஜிஆர், மற்றும் கேப்டன் விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா மற்றும் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தேமுதிக மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் முன்னாள் எம்பி.,வேணுகோபால் முன்னிலை வகித்தார். தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுக மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் , ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் சுதாகர், ராமஞ்சேரி மாதவன், திருவாலங்காடு சக்திவேல், நகர செயலாளர் கந்தசாமி உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் நிர்வாகிகள், கிளைக்கழக செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் திருவள்ளூர் தனி தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பேசும் போது, அதிமுகவை கண்டு திமுகவினர் பயத்தில் உள்ளனர். தமிழகத்தில் 70 சதவீத மக்கள் விடியா திமுக அரசு மீது எதிர்ப்பு அலையில் இருக்கிறார்கள். அந்த வாக்குகளை அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் நமக்கு சாதகமாக பயன்படுத்தி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்றார்.
மேலும் வருகிற 2026 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இந்த நாடாளுமன்ற தேர்தல். இந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று உறுதி ஏற்க வேண்டும். மேலும் திருவள்ளூர் தனி தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் வெற்றி பெறுவது நிச்சயம். அதற்கு வேட்பாளர் நல்லதம்பிக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய தேமுதிக மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், இது அறிமுக கூட்ட நிகழ்ச்சி மாதிரி தெரியவில்லை. ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு வெற்றி விழா கொண்டாடுவதற்கான கூட்டம் போல் தெரிகிறது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியே தீர்வோம் என நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
வேட்பாளர் நல்ல தம்பி 2011 தேர்தலில் வெற்றி பெற்ற போது அவருக்கு 25 கோடி ரூபாய் வரும் பேரம் பேசப்பட்டது. ஆனால் கேப்டன் விசுவாசியான இவர் கட்சி மாறாமல் பணத்துக்கு அடிமையாகாமல் இருப்பவர் தான் நமது வேட்பாளராக உள்ளார். எனவே வேட்பாளர் நல்லதம்பிக்கு முரசு தினத்தில் வாக்களித்து இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வேட்பாளர் நல்லதம்பி, சாதாரண சைக்கிள் கடை நடத்தி வந்த என்னை, எம்எல்ஏ வாக ஆக்கி அழகு பார்த்தார் கேப்டன் விஜயகாந்த் என்று சொல்லும் போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணில் நீர் ததும்பியது. அதனைத் தொடர்ந்து பேசிய அவர் சாதாரண தொண்டனும் எம்எல்ஏவாகவோ, எம்பி ஆகவோ ,பொதுச் செயலாளராகவோ ஆக முடியும் என்றால் அது அதிமுக தேமுதிக போன்ற கட்சிகளில் மட்டும் தான் நடக்கும். மற்ற எந்த கட்சிகளிலும் அது நடக்காது என்றார். என்னை வெற்றி பெறச் செய்தால் நான் உங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu