நாய்களுக்கு பிரியாணியில் விஷம் வைத்து கொன்றவர் கைது

நாய்களுக்கு பிரியாணியில் விஷம் வைத்து கொன்றவர் கைது
X

நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொன்ற வெற்றி வேந்தன் அடுத்த படம் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு உயிரிழந்த நாய்கள் படம்.

திருவள்ளூரில் பிரியாணியில் விஷம் வைத்து தெரு நாய்களை கொன்று தலைமறைவான ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 12 மற்றும் 13 வார்டுகளில் உள்ள ஜெயா நகர், காமாட்சி அவென்யூ, ஏ.எஸ்.பி.நகர், செந்தில் நகர்,பாரதி நகர் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருந்து வருகின்றன.

இப்பகுதியில் வாழும் மக்கள் அத்தகைய தெரு நாய்களுக்கு பெயர் வைத்து தனது வீட்டில் ஒரு நபராக அன்பு செலுத்தி அதற்கு உணவு அளித்து பராமரித்து வருகின்றனர்.

அப்பகுதியில் வாழும் தெருநாய்கள் மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் இரவு நேரங்களில் மக்களின் பாதுகாப்பாக இருந்து வந்தன.

இரவில் புதியதாக ஆட்கள் நகர் பகுதியில் வந்தால் மட்டும்தான் அவர்களை எச்சரிக்கும் வகையில் குலைத்து குடியிருப்பு வாசிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக இப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் மர்மமான முறையில் இறந்து வருவதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஏ. எஸ் .பி நகரில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் பராமரித்து வந்த 10 தெரு நாய்கள் கடந்த 21 ந் தேதி மர்மமான முறையில் 8 நாய்கள் வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்து கிடந்ததும் அதில் இரண்டு நாய்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்ததை மீட்டு சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அதில் 8 மாதங்கள் நிரம்பிய சில்கி என்னும் நாய் விஷத்தின் வீரியம் காரணமாக சிறுநீரகம் செயலிழந்து பரிதாபமாக துடி துடித்து இறந்துள்ளது. இரண்டு நாய்களுக்கும் 25 ஆயிரம் மருத்துவ செலவு செய்து பிரவுனி எனும் 11 மாதங்களான நாய் மட்டும் காப்பாற்றியுள்ளார்.

நாய்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அத்தகைய நாய்களுக்கு பிரியாணியில் வீரியம் அதிகமான விஷம் கலந்து கொன்று இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

அதில் சிகிச்சை அளித்து மீட்கப்பட்ட பிரவுனி நாயை அதே பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தத்தெடுத்துள்ளார்.

இத்தகைய நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றது யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள குடியிருப்பு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அதில் ஒரு நபர் பிரியாணி கொண்டு வந்து நாய்களுக்கு உணவளித்து சாகடித்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள் உதவியுடன் அதே பகுதி சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் ஆனது அளித்துள்ளார்.

நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டு ஆறாவது நாள் அதாவது கடந்த மாதம் 27 ஆம் தேதி மதியம் ஏ எஸ் பி நகரில் வசிக்கும் பஞ்சர் கடை உரிமையாளர் ராஜீவ் காந்தி மனைவி மீனா வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த காய் நறுக்கும் கத்தியை கொண்டு மிரட்டியுள்ளார்.

நாய்களைக் கொன்று வீடுகளில் கொள்ளையடிக்க மர்ம நபர்கள் திட்டம் தீட்டி உள்ளார்களா பொதுமக்கள் பயத்தில் இருந்து வந்த நிலையில், குடியிருப்பு பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் அத்தகைய நபர் அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயன் மகனும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் நிர்வாகியான வெற்றி வேந்தன் -( வயது 43 )என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

போலீசார் தன்னை தேடுவதை அறிந்த வெற்றி வேந்தன் தனது தொலைபேசி அழைப்பை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டு தலைமறைவானார்.

அவரிடம் தொடர்பு உள்ளவர்கள் தொடர்பு எண்ணை போலீசார் சி டி ஆர் போட்டு கண்டறிந்ததில் அவர் புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்கி இருந்த முகவரியை அறிந்த போலீசார் புதுச்சேரியில் சென்று அவரை கைது செய்து அவர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் - 325, 11(1)(I) பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் டவுன் காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணையானது மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் தான் வளர்த்து வரும் புறாக்கள் சண்டை சேவல்களை அடிக்கடி தெரு நாய்கள் கடிப்பதும் தொல்லை கொடுத்து வருவதாகவும், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தான் வளர்த்து வந்த ஒரு கோழின் கால்களை தெரு நாய்கள் கடித்து துண்டாக்கியதால் தெரு நாய்களை விஷம் வைத்து கொன்றதாகவும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவர் தெரு நாயை கோணியில் சுற்றி சுவற்றில் கொடூரமாக அடித்து கொலை செய்ததாகவும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

குற்றவாளி அண்ணனும் போலீசாராக தமிழக காவல்துறையில் பணியாற்றி வருகின்றார். இதற்கு முன்பு குற்றவாளி வெற்றி வேந்தன் மருத்துவ கல்லூரி மாணவன் கொலை வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டு சிறையில் இருந்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்தவர் ஆவார்.

சண்டை சேவல் புறாக்களை கடித்ததால் ஈவு இரக்கமின்றி தெரு நாய்களை விஷம் வைத்து கொன்று தலைமறைவாக இருந்து வந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகனை போலீசார் கைது செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!