ஆடி மாதப்பிறப்பு: பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்

ஆடி மாதப்பிறப்பு: பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள்
X
ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் திரண்டனர்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களை கட்டிய ஆடி திருவிழா. ஆடி மாத முதல் ஞாயிறு பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு படையெடுக்கும் பக்தர்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடி மாதத்தில் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

இந்தாண்டு கொரோனா சற்று அதிகரித்து வந்தாலும் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படாமல் முழுவதுமாக தளர்வுகள் நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஆடி மாதம் முதல் ஞாயிறுக்கிழமை பெரியபாளையம் பவானி அம்மனை தரிசிப்பதற்காக பக்தர்கள் ஆலயத்திற்கு படையெடுத்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மஞ்சளாடை அணிந்து பாத யாத்திரையாக வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அம்மன் சன்னதியில் பக்தர்கள் வாடை பொங்கலிட்டு தீபமேற்றி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். நீண்ட வரிசையில் சுமார் 3மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.

இரண்டு ஆண்டுகளாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் அம்மனை தரிசிப்பதே தங்களது மனநிறைவை அளிக்கும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆடி மாதத்தில் வந்து அம்மனிடம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுவதால் தொடர்ச்சியாக அம்மனை தரிசித்து செல்வதாக தெரிவிக்கின்றனர்.

பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், வேப்பஞ்சேலை அணிந்தும், அம்மனுக்கு கூழ் வார்த்தும், கரகம் ஏந்தி வந்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவை காரணம் காட்டி ஆடி மாதம் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில், இந்தாண்டு பக்தர்களின் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் மீண்டும் களைகட்டி வருகிறது. கார், வேன், டிராக்டர், இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளதால் போக்குவரத்து ஊர்ந்து செல்கிறது.




Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்