கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
X

ஆபத்தான நிலையில் நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகள்

தாமரைப்பாக்கம் ஊராட்சி தபால் தெரு பகுதியில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் தபால் தெரு பகுதியில்மழைநீர் கால்வாய் பணிகள் பாதியில் நிற்பதால் கழிவுநீர் சாலையில் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தபால் தெரு பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில் தாமரைப்பாக்கத்தில் இருந்து திருநின்றவூர் செல்லும் பிரதான சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலைக்கு இரு புறம் மழைநீர் செல்ல வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு பணிகள் சுமார் ஒரு ஆண்டிற்கு மேலாகவே நடைபெற்று வந்த நிலையில், தபால் தெரு நுழைவு வாயில் வரை கால்வாய் பணிகள் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த கால்வாயில் பாய்ந்து தபால் தெரு பகுதியில் கால்வாய் இணைக்கப்படாத காரணத்தினால் கால்வாய் நிரம்பி தண்ணீர் சீராக செல்ல முடியாமல் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து தெரு பகுதியில் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது.

இவ்வாறு தேங்கி நிற்கும் தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி கடிப்பதால் பல்வேறு விஷ காய்ச்சல்களும், உடல் உபாதைகளும் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

இது குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கையில், கால்வாய் பணிகள் தபால் தெரு பகுதியில் பாதியில் நிற்கின்றது. கால்வாயை முடிவடையாததால் தண்ணீர் சாலையில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் உணவு உட்கொள்ள முடியவில்லை. நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்படுகிறோம்.

மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி கடிப்பதால் நோய் தொற்று ஏற்படுகிறது. கால்வாய் இணைப்பு பகுதியில் ஸ்லாப் கம்பிகள் வெளியே நீட்டியபடி மக்களை அச்சுறுத்தும் வகையில் நீட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் இரவு பள்ளி மாணவி ஒருவர் தவறி கால்வாயில் விழுந்து படுகாயம் அடைந்தார். இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், வயதானவர்களும் தவறி விழுந்தால் அதில் உள்ள கம்பிகளால் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.

இந்த கால்வாய் பணியை விரைந்து முடித்து வைக்குமாறு பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

எனவே விரைந்து இப்பணிகளை முடிக்கவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என கூறினர்

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!