ஆரணியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்.
பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆரணி பேரூராட்சி சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் இருதய நோய், நரம்பியல், நுரையீரல், இறப்பை குடல், சிறுநீரகம், வாத நோய், பொது மருத்துவம், எலும்பு, மகப்பேறு, குழந்தைகள் நலம், தோல், கண், காது, பல், சித்த மருத்துவம் உள்ளிட்டவை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவ முகாமை ஆரணி பேரூராட்சி மன்ற தலைவர் எம்.ராஜேஸ்வரி தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் நியமனக்குழு உறுப்பினர் டி.கண்ணதாசன்,12-வது வார்டு உறுப்பினர் சந்தானலட்சுமிகுணபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதன் பின்னர், நலத்திட்ட உதவியாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர்.
இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெகன்நாதலு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பேரூராட்சி மன்ற அலுவலர்கள், ஊழியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கே.சுகுமார் வரவேற்றார்.
முடிவில்,பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் எம்.பாஸ்கரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆரணி பேரூராட்சி மன்றம் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu