அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்

அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்
X

மாணவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன்

பென்னாலூர் பேட்டை அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த பென்னாலூர் பேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 12 வகுப்பு வரை சுமார் 313 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் கடந்த ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வசதியும் கழிப்பிட வசதியும் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் பலமுறை கூறினாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் மாணவர்களை தரக்குறைவாக பேசுவதாக குற்றம்ச்சாட்டி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணித்து பள்ளி நுழைவாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அப்பள்ளிக்கு 2021-2022 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்த ஜீவா பணியாற்றிய காலகட்டத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. 2021-2022 பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 96 சதவீதமாகவும், 2022-2023 ஆண்டு 88 சதவீதமாகவும் 2023-2024 ஆண்டு 80 சதவீதமாக குறைந்துள்ளது.

தலைமையாசிரியர் மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மத்தியில் தரைக்குறைவாக பேசி நடந்து கொள்வதாகவும், இதனால் இப்பள்ளியில் பணியாற்றிய 12 ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் கேட்டு சென்றிருப்பதால் மாற்றாக ஆசிரியர்கள் நிரப்பப்படாததால் 24 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 12 ஆசிரியர்கள் இருப்பதால் மாணவர்கள் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக இப்பள்ளி ஆந்திரா எல்லையொட்டி அமைந்திருப்பதால் தெலுங்கு பேசும் மாணவர்கள் வசதிக்காக ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு மொழி பாடப்பிரிவு நடத்தப்பட்டு வருகின்றன. ஆந்திரா மாநிலத்தில் உள்ள அழகிரிப்பேட்டை, ஸ்ரீராமபுரம், மலகுண்டா, பங்காளம், கொடியம்பேடு, ஆகிய கிராமங்களில் இருந்து மாணவர்கள் தெலுங்கு தாய் மொழி பாடப்பிரிவு எடுத்து பயின்றுவருகின்றனர்.

கடந்த ஆண்டு ஒரே மாணவர் தெலுங்கு பாடப்பிரிவு பயின்ற நிலையில் இந்த கல்வி ஆண்டில் தெலுங்கு மாணவர்கள் யாரும் சேரவில்லை. பள்ளியில் கல்வித்தரம் வெகுவாக குறைந்து வருவதால் பெற்றோர்கள் மாணவர்களை வேறொரு பள்ளியில் சேர்ப்பதால் அப்பள்ளியின் மாணவர்கள் சேர்க்கை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் 450 ஆக இருந்தது இந்த கல்வி ஆண்டு 300 ஆக வெகுவாக குறைந்துள்ளது.

மாணவர்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் மாணவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மேற்கொண்ட பிரச்சினைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இந்த போராட்டத்தால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!