தலைமை செயலர் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றிய பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் தமிழக தலைமை செயலர் இறையன்பு, ஊரக வளர்ச்சி துறை ஆணையர் தாரேஸ் அகமது, திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்ற இறையன்பு, தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்களுடன் ஊராட்சியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக உள்ளதா, எத்தகைய பணிகள் நடைபெறுகிறது என்பது குறித்தெல்லாம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற பட்டியலின தலைவர் அமிர்தம்மாள், தலைமை செயலர் இறையன்பு முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றினார்.
கடந்த 2020-இல் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பட்டயலின பெண் ஊராட்சி மன்ற தலைவரை தேசிய கொடி ஏற்ற விடாமல் தடுத்ததான பிரச்சினை ஏற்பட்ட நிலையில், இம்முறை அது போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைமை செயலர் இறையன்பு முன்னிலை தேசிய கொடி ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர் தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu