கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நலத்திட்டங்களை வழங்கினார் ஆர்.எஸ். பாரதி

கருணாநிதி நூற்றாண்டு விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஒரேநாடு ஒரே தேர்தல் சந்திக்க தி.மு.க. பயப்படுவதாக கூறும் ஜெயகுமாருக்கு தமிழ்நாட்டின் வரலாறே தெரியாது. எதிர்க்கட்சிகள் இந்தியா என கூட்டணிக்கு பெயர் வைத்த பிறகு தற்போது பாரத் என பெயர் மாற்ற உள்ளது. இந்தியா என்ற பெயரை கேட்டதும் வரும் பயத்தை காட்டுகிறது என தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பகுதியில் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி ஆண்கள் வெளியே வந்தால் பெண்கள் வெளியே வர கூடாது என இருந்த நிலையில் தற்போது பெண்களை நாற்காலியில் அமர வைத்து விட்டு ஆண்கள் நிற்பது தான் திராவிட மாடல் ஆட்சி எனவும், இதுதான் சனாதனத்திற்கு எதிரானது என்றார். தமிழ்நாட்டில் மீண்டும் பழைய பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும், மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கி கொண்டு சனாதானத்தை பற்றி ஆளுநர் பேசும் போது அதனை எதிர்ப்பு பேச தங்களுக்கு உரிமை உண்டு என்றார்.2024ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டுபவர் தான் பிரதமராக வருவார் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதியிடம் ஒரேநாடு ஒரே தேர்தலை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயப்படுவதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருவது குறித்த கேள்விக்கு ஜெய்குமாருக்கு தமிழ்நாட்டின் வரலாறே தெரியாது என சாடினார். 1971ஆம் ஆண்டில் கலைஞரின் ஆட்சி காலம் மேலும் ஓராண்டு இருந்த நிலையில் 1971லேயே ஆட்சியை கலைத்து சட்டமன்றத்திற்கு, பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது எப்படி மதத்தின் பெயரால் பிரச்சாரம் செய்து வருகிறார்களோ அதே போல அப்போதும் தந்தை பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடித்து விட்டார் என பிரச்சாரம் செய்தார்கள் எனவும், அதையும் மீறி திமுக 184இடங்களில் அமோக வெற்றி பெற்றது எனவும், ஒரே ஒரு தொகுதியை தவிர அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றதாக கூறினார்.
அப்போது ஜெயக்குமாரின் தந்தை திமுகவில் இருந்தார் எனவும், அவரது தந்தையை கேட்டால் வரலாறை கூறுவார் என்றார். பாரத் என பெயர் மாற்றம் செய்ய உள்ளதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு அரசியல் சட்டத்தில் பாரத் என ஏற்கனவே உள்ளதால் அதில் தவறொன்றும் இல்லை எனவும், தற்போது அதற்கான அவசியம் என்ன என வினவினார்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து இந்தியா என கூட்டணி க்கு பெயர் வைத்த பிறகு தற்போது இந்தியா என்ற பெயரை கேட்டவுடன் பயம் வருகிறது என்றார். சனாதனம் தொடர்பாக பேசும் நிலையில் நாங்குநேரி சம்பவம் குறித்த கேள்விக்கு சனாதனம் என்பது பிராமணர்களுக்கும் பிற சாதியினருக்கும் இடையே நடப்பது என மனுநீதியில் கூறப்பட்டுள்ள 4வர்ணம் என்றும், தற்போது நடந்த சம்பவம் நடக்கக்கூடாது எனவும், தமிழ்நாட்டில் தற்போது சமநிலை ஏற்பட்டுள்ளதற்கு திராவிட இயக்கங்கள் தான் காரணம் எனவும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu