அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழக அரசுக்கு கோரிக்கை

விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
விளைநிலங்களை கையகப்படுத்தி அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என முதலமைச்சருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெரியபாளையத்தில் நடைபெற்ற வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மண், மனிதன், மாடு, வீடு வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. டிட்கோ நிறுவனம் சார்பில் ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முப்போகம் விளையக்கூடிய ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாத்திப்பதோடு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்கும் பொருட்டு வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் 170ஏக்கரில் அறிவுசார் நகரம் அமைக்க அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், இதனால் விவசாயிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது எனவும், 1200 ஏக்கர் விவசாயிகளுக்கு சொந்தமான நெல், சிறுதானியங்கள் விளைய கூடிய நிலம் கையகப்படுத்தக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறித்து புதிய திட்டங்களை நிறைவேற்றுவது கண்டிக்கத்தக்கது என்றார். தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகள் சம்மதம் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் சம்மதம் இல்லாமல் நிலம் கையகப்படுத்தப்படாது என அறிவித்த நிலையில் தற்போது அதற்கு மாறாக நிலத்தை கையகப்படுத்தும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. 2013ஆம் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பயன்படுத்துவதை விட்டுவிட்டு அதற்கு முந்தைய பழைய சட்டங்களின்படி நிலம் கையகப்படுத்த அரசு முயற்சிப்பது விவசாயிகளுக்கு பாதிப்பையும், நியாயமான இழப்பீடு கிடைக்காமல் மறுவாழ்வு கிடைக்காமல் பாதிப்பதாக கூறினார்.
அறிவுசார் நகரத்தை பொறுத்தவரையில் தமிழ்நாடு அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், விளை நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்த்து, விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள தரிசு நிலங்கள் உள்ள இடத்தில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்.
மேலும் உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நெல் விளையக்கூடிய இடத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது அறிவுடைய செயலாக இருக்காது என்றார்.
விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். முன்னதாக விளைநிலங்களை கையகப்படுத்தி அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu