வடகிழக்கு பருவமழையினால் பாதிப்படைந்த பயிர்களுக்கு நிவாரணத் தொகை அளிப்பு
வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் 13405 பேருக்கு ரூ. 9.02 கோடியில் நிவாரண தொகைக்கான ஆணை வழங்கிய அமைச்சர் ஆவடி சா.மு.நாசர்.
வடகிழக்கு பருவமழையினால் 33 சதவிதம் பாதிப்படைந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் 13405 பேருக்கு ரூ. 9.02 கோடியில் நிவாரண தொகைக்கான ஆணை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்
திருவள்ளுர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உணவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் சம்பா பருவத்திற்கு அமைத்துள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். பிறகு வடகிழக்கு பருவமழையினால் 33 சதவிதம் பாதிப்படைந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் 13405 பேருக்கு ரூ. 9.02 கோடியில் நிவாரண தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது, கடந்த பருவ மழையால் ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தால் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் நெல் வளர்ச்சி பருவத்தில் உள்ள பயிர்கள் மட்டும் 6643 ஹெக்டேர், நெற்கதிர் மற்றும் கதிர்முதிர்ச்சி பருவத்தில்}1859 ஹெக்டேர், பயிர் வகைகள் 2.8 ஹெக்டேர், நிலக்கடலை 79.8 ஹெக்டேர் மற்றும் கரும்பு 14.07 ஹெக்டேர் என 8399 ஹெக்டேரும், தோட்டகலைப்பயிர் 682 ஹெக்டேரிலும் பாதிக்கப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 11388 பேருக்கு ரூ.7.64 கோடியும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 2017 பேருக்கு ரூ.1.38 கோடியும் ஆக மொத்தம் 13405 பேருக்கு ரூ.9.02 கோடி நிவாரணத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 53515 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஒரு ஹெக்டேருக்கு 5 மெட்ரிக் டன் சராசரி மகசூல் வீதம் 267575 மெட்ரிக் டன் மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் விற்பனை உபரி 1.50 லட்சம் மெட்ரிக் டன் என கணக்கிடப்படுகிறது. நேரடி நெல் கொள்முதலுக்கு சுமார் 80 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் வரவு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள அரசு கிடங்குகள், அரசுக்கு சொந்தமான கட்டடங்களை பயன்படுத்தி அனைத்து வட்டாரங்களிலும் 74 இடங்களில், கூட்டுறவு துறை மூலம் 4 இடங்களிலும் என 78 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் விவசாயிகளிடமிருந்து தங்கு தடையின்றி விரைவில் கொள்முதல் செய்ய இயலும். வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து நெல் எடுத்து வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லையில் கண்காணிக்க கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அத்து மீறி எடுத்து வருபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும். கடந்த சொர்ணவாரி பருவத்தில் இடைத்தரகர்கள், வெளி வியாபாரிகள் தலையீடு தடுக்க விவசாயிகள் தக்க ஒத்துழைப்பு நல்கியது போல் நடப்பு சம்பா பருவத்திலும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் அமைச்சர் நாசர்.
இதன் தொடர்ச்சியாக திருவள்ளுர் நகராட்சி உழவர் சந்தை பகுதியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பாக நடைபெறும் 19-வது மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமை பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்து, தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டார்.
நிகழ்வுக்கு, கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், வாணிப கழகம் மண்டல மேலாளர் ஜே.சேகர், துணை மண்டல மேலாளர் முனுசாமி, துணை மேலாளர் எஸ்.மதுரநாயகம் , சுகாதார பணிகள் இணை இயக்குனர் ஜவஹர்லால், திருவள்ளூர் நகர கழக செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஜெ.ரமேஷ், பா.சிட்டிபாபு, பொன்.விமல், வ.ஹரி, சதீஷ்குமார், பவளவண்ணன், எல்.சரத்குமார், அயலூர் வெங்கடேசன், மற்றும் அரசு அதிகாரிகள் அரசு மருத்துவர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu