பள்ளி கட்டிடத்திற்கு முன்பாக ரேஷன் கடை கட்டுவதை எதிர்த்து போராட்டம்

திருவள்ளூர் அருகே கடம்பத்தூரில் தொடக்கப்பள்ளிக்கு முன்பாக ரேஷன் கடை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பேரம்பாக்கம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.இந்தப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் அமர்ந்து படிக்க போதிய வசதி இல்லாததால் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கூடுதல் கட்டிடமானது கட்டப்பட்டது.
மேலும் மாணவர்கள் அமர்ந்து உணவு அருந்திட போதிய இடம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவைகள் இல்லாததால் அதற்காக இடம் ஒதுக்க வேண்டுமென்று மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால் இதுவரை கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகமோ பள்ளி கல்வி துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் பழைய பள்ளி கட்டடத்திற்கு முன்பாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய ரேஷன் கடை கட்டும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ரேஷன் கடை கட்டுவதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இடையூறாக இருப்பதாகவும் வகுப்பறையில் மாணவர்களுக்கு போதுமான காற்று வசதி வெளிச்சம் போன்றவைகளுக்கு இடையூறாக ஏற்படுவதால் இங்கு ரேஷன் கடை கட்டிடம் கட்டக் கூடாது என்று மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் ரேஷன் கடை கட்டும் பணி தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதால் அந்த கட்டிடத்தை ஆய்வு செய்ய வந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மோகனாவை பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு ரேஷன் கடை கட்ட தடை செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பப்பி, மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனை ஏற்க மறுத்த பகுதி மக்கள் பள்ளிக்கூடத்திற்கு முன்பாக கட்டிய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். பின்னர் முறையாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்து விரைவில் அப்புறப்படுத்தப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu