ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
X

சுருட்டப்பள்ளி பள்ளிகெண்டீஸ்வரர் கோவிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

சுருட்ட பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

ஊத்துக்கோட்டை அருகே சுருட்டபள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் கோயில் பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் உள்ள சுருட்டபள்ளி கிராமத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. சிவன் கோயில்களில் எங்குமே லிங்க வடிவில் காட்சி தரும் சிவபெருமான் இந்த திருத்தலத்தில் மனித வடிவில் பள்ளி கொண்ட நிலையில் இருப்பது இங்கு தான். இதற்கு முக்கிய காரணம் புராண காலத்தில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந் போது அமிர்தம், மற்றும் ஆலோகாலம் எனப்படும் விஷம் ஆகியவற்றுடன் பல பொக்கிஷங்கள் கடலில் இருந்து எழுந்தன.


உலக உயிர்களை காக்க அதிலிருந்து வெளிப்பட்ட விஷத்தை சிவன் அருந்தியதாகவும், அந்த விஷம் சிவனின் கழுத்தில் இறங்கியபோது அதனை பார்வதி தேவி கைகளால் சிவனின் கழுத்தில் அழுத்தி பிடித்து நீலமாக மாற்றினார். பின்னர் புறப்பட்டு ஆந்திர மாநிலம் காளஹஸ்திர்க்கு சென்ற போது சிவனுக்கு விஷம் அருந்திய காரணத்தினால் சற்று சோர்வு ஏற்பட்டு இப்பள்ளிக்கொண்டேஸ்வரிடத்தில் பார்வதி தேவியின் மடியில் படுத்து சற்று ஓய்வெடுத்ததால் இந்த இடத்திற்கு இவ்வளவு சிறப்பு. ஒவ்வொரு பிரதோஷத்தில் இத்திருத்தலத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பிரதோஷ விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலையிலேயே ஆலயத்தில் உள்ள விநாயகர், வால்மீகீஸ்வரர், மரகதாம்பிகா,தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை, பள்ளி கொண்டீஸ்வரர் மற்றும் சர்வ மங்களா தேவி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரருக்கு மலர்களாலும் திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணிவரை வால்மீகீஸ்வரர் எதிரே உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர்,தேன், ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அருகம்புல்,வில்வ இலைகளால், மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் உற்சவரான சிவன் - பார்வதி கோயிலை சுற்றி வலம் வந்தனர். இப்பூஜைகளை தலைமை குருக்கள் கார்த்திகேசன் சிவாச்சாரியார் செய்தார். நிகழ்ச்சியில் ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஹஸ்தி, புத்தூர், சத்தியவேடு, சூளூர்பேட்டை, நாயுடு பேட்டை, நெல்லூர், மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வடதில்லை பாபஹரேஸ்வரர் , காரணியில் உள்ள காரணீஸ்வரர் மற்றும் பெரியபாளையம் நம்பாலீஸ்வரர் , ஐமுக்தீஸ்வரர் ஆகிய கோயில்களில் நந்திக்கு பால் தயிர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு