சோழவரம் அருகே குண்டும் குழியுமான சாலை: கிராம மக்கள் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அமைந்துள்ள பூதூர் கிராமத்தில் இருந்து சோழவரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இந்த சாலையை சீரமைக்க தவறிய அரசு அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் பூதூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ள சாலையில் சீரமைக்காததால் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலையில் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.
சிறிய மழைக்கே சேறும், சகதியுமாக மாறி சாலையில் நடந்து கூட செல்ல முடியாத அவலநிலை நிலவுவதாக வேதனை தெரிவித்தனர். மேலும் சுங்கக்கட்டணத்தை தவிர்ப்பதற்காக கனரக லாரிகள் தங்களது கிராமத்தின் வழியே செல்வதாகவும் குற்றம் சாட்டினர்.
அண்மை காலமாக அரசு பேருந்து சேவையும் மோசமான சாலையை காரணம் காட்டி நிறுத்தப்பட்டுள்ளதாக மாணவர்கள், முதியோர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் அரசு அதிகாரிகளிடம் பேசி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
முன்னதாக சேறும், சகதியுமாக சாலையில் நாற்றுக்களை நடுவதற்காக பெண்கள் சிலர் கைகளில் நாற்றுக்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu