பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 2 லட்சத்து 70 ஆயிரம் மீன் குஞ்சுகள்

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
திருவள்ளூர் அருகே தேசிய மீன்வளர்ப்போர் தினத்தை முன்னிட்டு பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 2. லட்சத்து 70 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளான புல்லரம்பாக்கம், சதுரங்கப் பேட்டை, மோவூர், அரும்பாக்கம், நம்பாக்கம், பங்காருபேட்டை, கொழுந்தலூர், கைவண்டூர், பாண்டூர், பட்டறைபெரும்புதூர், உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தினந்தோறும் மீன்பிடிப்பின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பூண்டி நீர்த்தேக்கத்தில் மீன்வளத் துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்தில் தற்போது நீர்மட்டமானது 32.60 அடியாக உயர்ந்துள்ளதால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கங்காதரன் தலைமையில் பூண்டி நீர்த்தேக்கத்தில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டில் மட்டும் 22 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக 2 லட்சத்து 70 ஆயிரம் மீன் குஞ்சுகளை பூண்டி நீர்த்தேக்கத்தில் விடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மீன்வள ஆய்வாளர் விஜயலட்சுமி, பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ராரமேஷ், மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் என பலர் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu