சென்னை புழல் பகுதியில் தொடரும் ஆன்லைன் மோசடிகளால் போலீசார் திணறல்
புழல் சுற்று வட்டார இடங்களில் பல்வேறு வகைகளில் தொடர்ந்து அரங்கேறி வரும் பகுதிநேர வேலை, வேலை தேடுவோர், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அரங்கேறும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
சென்னை புழலை அடுத்த புத்தகரம் சிங்காரவேலன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பாபு ஆனந்த் (வயது57). வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் வகையில் இணையத்தில் வேலை தேடி வந்துள்ளார். அப்போது ஒரு நிறுவனத்தை கண்ட பாபுஆனந்த் அதனை தொடர்பு கொண்டதில் முதலில் 100ரூபாய் கொடுத்து விவரங்களை பதிவு செய்து இணைந்துள்ளார். ஆன்லைன் வணிக ரீதியில் செயல்படும் டீலர்கள் தங்களது விற்பனையை அதிகரித்து காட்ட வேண்டும் என்பதற்காக பொருட்களை வாங்க வேண்டும் எனவும், அந்த பொருட்களை பணம் செலுத்தி வாங்கினாலும், விற்பனை செய்தது போல அவர்களது கணக்கில் சேர்ந்து விடும் எனவும் ஆனால் பொருள் உங்களுக்கு வராமல் நீங்கள் செலுத்திய பணம் அதற்கான கமிஷன் உங்களது கணக்கில் சிறிது நேரத்தில் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக 200ரூபாயில் ஒரு பொருளை வாங்கிய போது 50ரூபாய் கமிஷனுடன் 250ரூபாய் திரும்ப கிடைத்துள்ளது. அதற்கடுத்து சிறிது சிறிதாக அடுத்தடுத்து பொருட்களை வாங்குமாறு பாபுஆனந்த் அறிவுறுத்தப்பட்டுள்ளார். தம்மிடம் இருந்த பணம் மட்டுமின்றி, தனிப்பட்ட நபர் கடன், மக்களிடம் இருந்தும் சிறிது தொகை என அடுத்தடுத்து பாபுஆனந்த் ரூ.79582/- முதலீடு செய்து வாங்கியுள்ளார். அடுத்தடுத்து அவரது கணக்கில் முதலீட்டுடன், கமிஷன் தொகை சேர்ந்த போதிலும் தொடர்ந்து அவரது பணத்தை எடுக்க முடியாமல் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளை முடித்தால் மட்டுமே உங்களது கமிஷனுடன் சேர்த்து முதலீட்டை எடுக்க முடியும் கூறப்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் அதிர்ச்சியடைந்த பாபுஆனந்த் இது ஒரு மோசடி என உணர்ந்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புழல் அடுத்த புத்தகரம் பகுதியை சேர்ந்த சசிகலா (39) என்பவருக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றும் உங்களது இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் வந்துள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பதால் சசிகலா மின் கட்டணம் செலுத்திய தம்முடைய ரசீதை வாட்சப்பில் அனுப்பி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து மீண்டும் ஒரு இணைப்பை அனுப்பி அதில் அப்டேட் செய்ய வேண்டும் என முதற்கட்டமாக 10ரூபாய் பிடித்துள்ளனர். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 2000ரூபாயை மோசடி கும்பல் சுருட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சசிகலா இது குறித்து புகார் அளித்துள்ளார்.
புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்பசாமி நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ராஜேஷ் அண்மையில் தனியார் வங்கியில் க்ரெடிட் கார்டிற்காக விண்ணப்பித்திருந்தார். அவருக்கு க்ரெடிட் கார்டு 3நாளில் வரவுள்ளதாக அவரது செல்போனிற்கு முதலில் குறுஞ்செய்தி வந்துள்ளது. திடீரென அவரது க்ரெடிட் கார்டில் இருந்து அடுத்தடுத்து 3முறை பணம் எடுத்து ரூ.154422 எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புழல் அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த அபிராமி (30). என்பவருக்கு தனியார் வங்கியில் வேலைக்கான நேர்காணல் அழைப்பு வந்துள்ளது. தொடர்ந்து வங்கியின் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் சுய விவரங்களை பதிவேற்ற அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் பதிவு கட்டணமாக 25ரூபாய் செலுத்த வேண்டும் என வந்துள்ளது. அப்போது தம்முடைய வங்கி விவரங்களை பதிவிட்ட போது OTPஐ பெற்று 9775 பணத்தை எடுத்துள்ளனர். உடனடியாக அபிராமி தம்முடைய போனை ஏர்பிளான் மோடில் மாற்றி பின்னர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார்களின் பேரில் ஐபிசி 420 மோசடி, தொழில்நுட்ப சட்டப்பிரிவு என இரண்டு பிரிவுகளில் தனித்தனியே வழக்குகளை பதிவு செய்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி மற்றும் இணைய வழி குற்றம் என்பதால் குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவு என அனைத்து பிரிவு போலீசாரும் மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் சுற்றுவட்டார இடங்களில் தொடர்ந்து ஆன்லைனில் மோசடி செயல்களில் அரங்கேறி வருவதால் காவல்துறையினர் துப்பறிய முடியாமல் திணறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu