மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
மணல் கொள்ளையை தடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.
மழைக்காலங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் பாதுகாக்கும் ஏரிக்கரையை உடைத்து மணல் திருடும் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டர் பாளையம் ஊராட்சியில் சுமார் 4000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காலஸ்தி கோவிலுக்கு சொந்தமான கோவில் இடம் உள்ளது. இந்த நிலத்தில் ஏரிக்கரை உள்ளது.
இந்த ஏரி கரையில் மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் ஜேசிபி எந்திரங்களை வைத்து அடிக்கடி மணலை திருடிச் செல்வதால் ஏரிக்கரை உடைக்கப்பட்டு செல்வதால் அருகில் உள்ள கொசஸ்த்தலை ஆற்று வெள்ள நீர் சீமாவரம் மதகுகளின் வழியாக ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் கிராம மக்கள் ஊரை விட்டு வெளியே செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த வெள்ள நீர் வருவதால் அப்பகுதி மக்கள் வீடுகளை இழந்து சாலை ஓரங்களில் தஞ்சம் அடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் எங்கள் கிராமத்தில் மழைக் காலங்களில் வெள்ள நீர் வருவதினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றோம், என்பதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவார்கள். அதுமட்டுமின்றி வெள்ள நீர் வீட்டுக்குள் வருவதினால் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் சான்றிதழ் உட்பட அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில் தவித்து வருகிறோம், இதனால் உடனடியாக மணல் கொள்ளையர்களை தடுக்க வேண்டும் என்றும் எங்கள் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கவுண்டர் பாளையம் சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் பலமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தும் தங்கள் பகுதியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் சீமாவரம் பகுதியில் செல்லும் கொசஸ்த்தலை ஆற்றில் மணல் அள்ளுவதால் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணி செல்ல வழி இல்லாமல் அங்கே தேங்கி நிற்பதால் பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளும் அதற்கு உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே தங்கள் பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளைகளை தடுக்க வேண்டும் என்று கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். இது மட்டுமல்லாமல் முள்ளவாயில், வைதிகை மேடு, திருநிலை உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு நேரங்களில் அதிக அளவில் மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறையும் அபாயமும் உள்ளது. இதனை தடுக்க வேண்டிய போலீசாரும் கண்டு கொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இத்தகைய மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu