பெரியபாளையம் பவானி அம்மன் ஆடி மாதம் மூன்றாவது வார திருவிழா
பல்வேறு அலங்காரத்தில் பவானி அம்மன்
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலய3.வது ஆடித்திருவிழா கோலாகலம்.4.கிராம மக்கள் பவானி அம்மன் வாகனங்களில் வைத்து உலா வந்து பெரியபாளையம் பவானி அம்மனுக்கு சீர்வரிசைகளை கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரையில் சுயம்புவாக எழுந்தருளிய புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத திருவிழா 14 வார காலம் வெகு விமர்சையாக நடைபெறும்
மேலும் இக்கோவிலுக்கு சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பவானி அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக் கடனை செலுத்தி வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மூன்றாவது ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பவானி அம்மனுக்கு அதிகாலை பல்வேறு நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும், அலங்காரம் செய்து தீப, தூப, ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார், மாலை உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து நாக வாகனத்தில் ஆனந்த சயனத்தில் பெரியபாளையம் முக்கிய வீதிகளில் உலா வந்தன.
இதனை அடுத்து மூன்றாவது ஆடி திருவிழாவானது உள்ளூர் கிராம மக்கள் காலங்காலமாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று பெரியபாளையம் டாக்டர் அம்பேத்கார் நகர், தண்டு மாநகர், ராள்ளபாடி, அரியப்பாக்கம் உள்ளிட்ட 4 கிராம மக்கள் இந்த ஆடி மூன்றாவது திருவிழாவை சிறப்பாக கொண்டாடினர்.
இதற்காக பல்வேறு வடிவங்களில் பவானி அம்மன் வடிவமைத்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வைத்து மேள தாளங்கள் முழங்க, கரகாட்டம், ஆடியவாறு அந்தந்த கிராமத்திலிருந்து கிராம மக்கள் பொங்கல் பானை தலையில் சுமந்து, மஞ்சள்,குங்குமம், புடவை, வளையல், பழை வகைகள் கொண்டு பவானி அம்மனுக்கு தாய் வீட்டு சீர்வரிசைகளைக் கொண்டு ஊர்வலமாக பவானி அம்மன் கோவிலுக்கு வந்து அடைந்து சீர்வரிசைகளை அம்மனுக்கு படைத்தனர்
இதன் பின்னர் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்தத் திருவிழாவை காண பெரியபாளையம் சுற்று உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பவானி அம்மன் தரிசனம் செய்து வழிபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu