சோழவரம் அருகே அங்கன்வாடி மையம் திறப்பு
அங்கன்வாடி மையம் திறப்புவிழா.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த ஒரக்காடு ஊராட்சியில் அடங்கிய கிருதலாபுரம் கிராமத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம் சிதிலமடைந்தது. இதனை தொடர்ந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திறப்புவிழா நடைபெற்றது.
எழில் கொஞ்சும் வண்ணத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் குழந்தைகளை கவரும் விதத்தில் ஆங்கில எழுத்துக்கள், சிங்கம், புலி, யானை, குதிரை உள்ளிட்ட விலங்குகள், காய்கறிகள், கனிவகைகள், அழகிய பூங்கா, கார், ரயில், விமானம் போன்று தத்ரூபமாக வரையப்பட்டிருந்த ஓவியங்கள், ஸ்மார்ட் வகுப்புக்காக பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சி பெட்டி ஆகியவை அனைவரையும் வியக்க வைத்தது.
ஊராட்சிமன்ற தலைவர் நீலா சுரேஷ் விழாவிற்கு தலைமையேற்று குத்துவிளக்கேற்றி அங்கன்வாடி மையத்தை குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதனை தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு சிலேட்டுகள், புத்தகப்பை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் லட்சுமணன், கிராம நிர்வாக அலுவலர் ஷர்மிளா, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சீனிவாசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி செல்வம், வார்டு உறுப்பினர்கள் ஷகிலா, நதியா மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். தனியார் பள்ளிகளை மிஞ்சும் விதத்தில் அனைத்து வசதிகளுடன் அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டதற்கு கிராம மக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu