வட மாநில தொழிலாளர்கள் தாக்குதல் பீதி : வீடியோ வெளியிட்ட திருவள்ளூர் ஏஎஸ்பி
வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதில்லை திருவள்ளூர் ஏஎஸ்பி வீடியோ விளக்கம் வைரல்
வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என திருவள்ளூர் ஏ.எஸ்.பி விவேகானந்தா சுக்லா ஹிந்தியில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
வட இந்திய மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக புரளி செய்திகளும் வீடியோக்களும் பரவி வந்த நிலையில், இதுகுறித்த விளக்கத்தை அம்மாநில தொழிலாளர்களுக்கு புரியும் வகையில் ஹிந்தியில் வெளியிட்டுள்ளார் திருவள்ளூர் ஏ எஸ் பி விவேகானந்த சுக்லா.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் ஏராளமானவர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை வட மாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை. அப்படி தாக்கப்படுவதாக வரும் தகவல் அனைத்தும் போலியானவை. இப்படி போலி வீடியோக்களை பரப்பி மக்களுக்குள் பிரிவினையையும் பீதியையும் உண்டாக்கும் எந்த ஒரு சக்தியாக இருந்தாலும் காவல்துறை நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கி பணி புரியும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தார் யாரும் பயப்பட தேவையில்லை என ஏ.எஸ்.பி விவேகானந்தா சுக்லா வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கு பணிபுரியும் வட மாநிலத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளித்து காத்து வருவதாகவும் ஏ.எஸ்.பி விவேகானந்தா சுக்லா வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்தியில் பேசி அவர் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu