மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியரிடம் வாக்குவாதம் செய்யும் ஊர் மக்கள்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் மின்வாரிய ஊழியர் ஓட்டம் பிடித்தார்.
திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கசவநல்லாத்தூர் கிராமத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்தப் பகுதியில் சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக அப்பகுதி வாசிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை அந்த மின்மாற்றியின் பழுது நீக்காமல் உள்ளதால் கசவநல்லாத்தூர் பகுதி கிராம மக்கள் இருளில் மூழ்கி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கசவநல்லத்தூர் நேருஜி நகர் பகுதி மக்களின் அடிப்படை தேவையான மின்சார வசதி 3 நாட்களாக ஏற்படுத்தி தராத காரணத்தினால் மின்சாரம் இல்லாமல் குடிநீர் மேல் தொட்டிக்கு தண்ணீரை ஏற்றுவதில் சிக்கல் ஏற்படுத்துள்ளது.
ஊராட்சி சார்பில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்காததால் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் அருகில் உள்ள கிராமங்களுக்கு நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனை அடுத்து திருவள்ளூர் பேரம்பாக்கம் வழியாக காஞ்சிபுரம் செல்லக்கூடிய பிரதான சாலையில் குவிந்த கசவநல்லாத்தூர் நேருஜி நகர் பகுதி வாழ் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த மின்சார ஊழியரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் அப்பகுதியில் இருந்து மின்சார ஊழியர் தனது இருசக்கர வாகனத்தில் ஓட்டம் பிடித்தார்.
மேலும் சாலையிலிருந்து கலைந்து செல்ல வற்புறுத்திய கடம்பத்தூர் போலீசாரிடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது . தண்ணீர் மின்சாரம் என அடிப்படைத் தேவைகளுக்காக சாலையில் சூழ்ந்த பொது மக்களால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக திருவள்ளூர்-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu