திருவள்ளூரில் தேருக்கு அடியில் மகனுடன் வாழும் நெல்லை பெண்: கருணை காட்டுமா தமிழக அரசு?
திருவள்ளூர் தேரடி பஜார் பகுதியில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஷகிலாபானு.
திருவள்ளூர் தேரடி பஜார் பகுதியில் வீரராகவர் கோவில் தேர் உள்ளது. இந்த தேரின் கீழ் பகுதியில் கடந்த சில வருடங்களாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஷகிலாபானு என்ற பெண் தனது 10 வயது மகனுடன் வாழ்ந்து வருகிறார். உறவினர்கள் கைவிட்ட நிலையில் இந்த தேர்தான் தனக்கும், தனது மகனுக்கும் உலகம் என்று கூறி வரும் ஷகிலாபானு, நல்ல உள்ளங்கள் அளிக்கும் சிறு சிறு உதவியால் தனது மகனை எடப்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படிக்க வைத்து வருகிறார்.
கடந்த 6 மாதத்திற்கு முன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஷகிலாபானு மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்டது காணப்படும் இவரை சிலர் கேலியும் கிண்டலும் செய்வர். காரணம், தனக்கு ஏற்பட்ட விபத்தைபோல் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்றும், அதனால் போக்குவரத்து போலீசார் இல்லாத நேரங்களில் அவரே போக்குவரத்தை சீர்செய்வதாக கூறி வருகிறார். நல்ல எண்ணத்தோடு போக்குவரத்தை சீர் செய்யும் இவரை சிலர் பின்பற்றினாலும், இன்று வரை சிலர் இவரை ஏளனமாகத்தான் பார்க்கின்றனர்.
எது எப்படியோ நான் எனது எண்ணத்தில் சரியாக உள்ளேன் என்றும், எனக்கு ஏற்பட்ட விபத்து போன்று வேறு யாருக்கும் ஏற்பட்டு அவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி போக்குவரத்தை சீர் செய்கிறேன் என்கிறார் ஷகிலாபானு. வெயிலிலும் மழையிலும், இரவிலும் பகலிலும் தேரே தஞ்சம் என்று இருக்கும் இவருக்கும், இவரது மகனுக்கும் தமிழக அரசு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu