தேசிய நெடுஞ்சாலையில் ராட்சச பள்ளம், வாகன ஓட்டிகள் ஆவதி.
தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்
சோழவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி. சாலைகளை விரைந்து சீரமைக்க கோரிக்கை!
சென்னையில் இருந்து வடமாநிலங்களை இணைக்கும் பிரதான சாலையான ஜி.என்.டி. சாலை மாதவரம் ரவுண்டானாவில் தொடங்கி புழல், செங்குன்றம், ஜனப்பன்சத்திரம், தச்சூர், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் வரை சுமார் 45கி.மீ. தமிழத்தில் செல்கிறது. ஆந்திரா மற்றும் வடமாநிலங்களை இணைக்கும் இந்த சாலை வழியே நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலையில் அத்திப்பேடு அருகே சர்வீஸ் சாலையில் ராட்சத அளவிலான பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இந்த இடத்தை கடக்கும்போது மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஒருவித அச்சத்துடனே இந்த பள்ளத்தை கடந்து செல்கின்றனர். பள்ளத்தை சீரமைக்காமல் செடிகளை நட்டு வைத்துள்ளனர்.
மேலும் தேவனேரி சர்வீஸ் சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. மேலும் தண்ணீர் சூழ்ந்து பள்ளங்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் இருப்பதால் அந்த பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் போக்குவரத்தை தடை செய்துள்ளனர். இதனால் அங்குள்ள கிராமங்களுக்கு செல்பவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
சாலை சேதமடைந்தால் அதனை சீரமைக்க வேண்டும், அதை செய்யாமல் போக்குவரத்தை தடை செய்வது எந்த வகையில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த சில தினங்களுக்கு சாலையில் தேங்கி நின்ற மழை நீரில் பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் உயிரிழந்துள்ளார். இதே போன்று குண்டும் குழியுமாக இருக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் விபத்துக்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும் சாலையில் நீர் தேங்குவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. அவசர சிகிச்சைகளை பெறுவதற்காக மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இந்த மோசமான சாலையால் குறித்த நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இருசக்கர வாகனங்களில் அலுவலகம் செல்வோர் இந்த சாலைகளில் பயணித்து மீண்டும் வீடு திரும்புவார்களா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. கார்ப்பரேட் நிறுவங்களுக்காக சாலை அமைத்து கொடுக்கும் அதிகாரிகள் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளை சீரமைப்பதில் அக்கறை செலுத்துவதில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர்.
சுங்ககட்டணம் செலுத்தி பயன்படுத்தும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையிலும் அடிப்படை தேவைகளும் இல்லாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். வாகனங்கள் செல்லும் சாலையினை முழுமையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த சாலையில் இனியேனும் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் சீரமைத்து போக்குவரத்து தடையின்றி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu