துணை வேளாண்மை விரிவாக்க மையங்களை திறந்து வைத்த அமைச்சர் நாசர்

கடம்பத்தூர் ஒன்றியத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களை திறந்து வைத்த அமைச்சர் நாசர்
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பேரம்பாக்கம், பட்டரைப்பெரும்புதூர், கனகம்மாசத்திரம் ஆகிய இடங்களில் தலா ரூ.38 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1.14 கோடி மதிப்பீட்டிலான 3 துணை வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்க்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்டச் செயலாளர் திருத்தணி சந்திரன் எம்.எல்.ஏ சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன், ஒன்றிய செயலாளர் மோ.ரமேஷ், ஒன்றிய குழு துணைத் தலைவர் சரஸ்வதி ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் வி.சமுத்திரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ஜெபக்குமாரி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
விழாவில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வேளாண் விரிவாக்க மையங்களை திறந்து வைத்து, வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக 14 விவசாயிகளுக்கு தலா 2 தென்னங்கன்றுகளும், ஒரு விவசாயிக்கு ரூ.8,820 மதிப்பீட்டில் விசைத் தெளிப்பானும், 5 விவசாயிகளுக்கு மண்வள அட்டையும், 5 விவசாயிகளுக்கு நெல் விதைகளும், தோட்டக்கலைத் துறை சார்பாக ரூ.80 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் 15 விவசாயிகளுக்கு மிளகாய் குழித்தட்டு நாற்றுகள், அங்கக உரங்கள், வெண்டைக்காய் விதைகள், தர்ப்பூசணி விதைகள் மற்றும் செவ்வந்தி குழித்தட்டு நாற்றுகள் ஆகிய இடுபொருட்களும் என மொத்தம் 40 விவசாயிகளுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது, வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பேரம்பாக்கம், பட்டரைபெரும்புதூர், கனகம்மாசத்திரம் ஆகிய 3 இடங்களில் துணை வேளாண் விரிவாக்க மையங்களை 2வது கட்டமாக திறந்து வைக்கப்பட்டதுள்ளது.
துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் வேளாண் இடுபொருட்களான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டக் கலவைகள் மற்றும் உயிர்க் கட்டுப்பாட்டுக் காரணிகள் முதலியவை விவசாய பெருமக்களுக்கு தேவையான அளவில் பாதுகாப்பாக இருப்பு வைத்து தடையின்றி விநியோகம் செய்ய மிகவும் வசதியாக இருக்கும்.
இதனால் சுமார் 30 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள். மேலும், இருபோக சாகுபடி நிலங்களை அதிகரித்து உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.
இதில் மாவட்ட ஒன்றிய, கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu